6 அக்டோபர் 2024
காட்டுத்தீயாய் பரவும் போலிச் செய்தி; திருப்பூரில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்.!

காட்டுத்தீயாய் பரவும் போலிச் செய்தி; திருப்பூரில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்.!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக பரவிய போலிச் செய்தியை நம்பிய தொழிலாளார்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொந்த மாநிலங்களில் வேலை இல்லததால், அதிக கூலி கிடைக்கும் தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வருகிறார்கள். அதுவும் மத்தியில் பாஜக இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பின்னர், வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணிகளால் வடமாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலார்கள் அதிகளவில் தென்னிந்தியாவிற்கு வருகை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

அதேபோல் தமிழகத்திற்கு கூலி வேலைக்கு வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ஆட்சிக்கு வந்தால் வடமாநில தொழிலாளர்கள் மீது கஞ்சா கேஸ் மற்றும் ரேப் கேஸ் போடுவேன் எனக்கூறியது சர்ச்சையானது. அதேபோல் சாரை சாரையாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்திறங்கிய வடமாநில தொழிலார்களின் வீடியோவும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.

மேலும் திருப்பூரில் தமிழ் தொழிலாளரை வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக துரத்தும் வீடியோவும் வைரலானது. ஆனால் தமிழ் தொழிலாளியின் மீது தான் தவறு இருந்தது என்பது பின்னரே தெரியவந்தது. இப்படியாக தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைகள் தற்போது தீவிரமாகியுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறிப்பாக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ வைரலானது.

மேலும் வடமாநிலங்களில் இந்த வீடியோ பேசு பொருளானது. பெரும்பாலான உள்ளூர் ஊடகங்கள் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறியாமல் செய்திகளை வெளியிட்டன. மேலும் பாஜகவைச் சேர்ந்த நபரும் இந்த வீடியோவை பகிர்ந்து, தமிழகத்தில் இந்திக்காரர்கள் கொல்லப்படுவதாக கூறினார். அவரது ட்விட்டர் பதிவு 5 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு 5 ஆயிரம் பேரால் பகிரப்பட்டது.

அதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ‘‘தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து நான் செய்தித்தாள்களில் அறிந்தேன். தமிழக அரசுடன் பேசி பீகாரில் வசிக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்’’ என அவர் ட்வீட் செய்திருந்தார்.

அதையடுத்து தமிழக காவல்துறை உண்மை நிலையை விளக்க, இந்தியில் ட்வீட் செய்தது. மேலும்டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோ பதிவில், “பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக ஒரு தவறான போலியான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இரண்டு வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடியோக்களுமே போலியானது.

இந்த இரண்டு சம்பவங்களும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் நிகழ்ந்தது. இந்த இரண்டு சம்பவத்தில் ஒன்று பீகாரை சேர்ந்த இரு குழுக்களில் ஏற்பட்ட மோதல், மற்றொன்று கோயம்புத்தூரில் தமிழகத்தை சேர்ந்த உள்ளூர் மக்கள் மோதிக்கொண்டது. ஆனால் இது அப்படியே மாற்றப்பட்டு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி செய்தி பரப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது” என்றார்.

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களிடையே அச்சம் பரவியதால், இன்று சொந்த ஊர்களுக்குச் செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.