திமுக அதிமுக வுடன் நேரடியாக மோதும் விஜய் ரசிகர் மன்றம்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை ஒதுக்கி விஜய்யின் சர்க்கார் நல்லாட்சி அமைய வேண்டும் என திமுக, அதிமுகவுடன் நேரடியாக மோதும் விதத்தில் விஜய் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றம் வந்துள்ளது. நடிகர்கள் அதிக அளவில் அரசியலில் குதித்துள்ளனர். நடிகர் கமல் கட்சியே ஆரம்பித்து நடத்தி வருகிறார். ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிட்டு விரைவில் கட்சிப் பெயரை வெளியிடுவேன் என்கிறார்.

பெரிய இடைவெளி உள்ளதால், அதை நிரப்பவே நான் அரசியலில் குதித்துள்ளேன் என ரஜினி அறிவித்தார். நடிகர் விஷாலும் அரசியலில் குதிப்பேன் என்று அறிவித்தார். நடிகர் விஜய் ஜெயலலிதா, கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே அவர் தந்தையின் அரசியல் அறிவிப்பால் பல சங்கடங்களைச் சந்தித்தார்.

ஆரம்பத்தில் திமுக ஆதரவாளராக காட்டிக்கொண்ட விஜய்யின் ‘காவலன்’ உள்ளிட்ட படங்களுக்கு சிக்கல் எழுந்ததால் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்தார். அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அதன் பின்னர் விஜய்யின் ரசிகர்களால் அதிமுக ஆட்சிக்கு வந்தது எனும் பொருள்பட வெளிவந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் பேட்டியால் ஜெயலலிதா கோபமடைந்தார்.

’தலைவா’ படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டது. அப்படத்தால் ஆளும் தரப்பினர் கோபமடைந்தனர். பின்னர் விஜய் எதிலும் ஈடுபடாமல் பட்டும்படாமல் இருந்தார். இந்நிலையில் ’சர்க்கார்’ படம் வெளியாகும் போஸ்டர் வெளியானதில் சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு விமர்சனம் வந்தது.

அதன்பின்னர் இசை வெளியீட்டு விழாவில் அரசியலில் இறங்குவேன் என்கிற தொனியில் பேட்டியில் கூறியிருந்த விஜய் நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்தார். இது ஆளுங்கட்சிக்கு கோபத்தை எழுப்பியது.

சினிமா வசனம் பேசுவதல்ல அரசியல் என்று அவரை அமைச்சர்கள் விமர்சித்தனர். தளபதி என்கிற வார்த்தையையும் சிலர் ஸ்டாலினோடு சம்பந்தப்படுத்தி விமர்சித்தனர். இதற்கு உதயநிதி ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன் பின்னர் புஷ்கர விழாவில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்னாலே மற்றவர்களுக்கு ஏன் எரிகிறது என்று பேட்டி அளித்திருந்தார்.

அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் விஜய் தீவிரமாக இருப்பதைக் காண முடிகிறது. கமலும் அவரை வரவேற்று வந்தால் கைகோக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை வம்பிழுக்கும் வகையில் விஜய் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மதுரை தெற்கு மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக மதுரை முழுவதும் ’சர்க்கார்’ பட வர்வேற்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத ஆளுங்கட்சி, எதற்கும் உதவாத எதிர்க்கட்சி, அமையட்டும் தளபதியின் சர்க்கார் நல்லாட்சி” என்ற வாசகங்கள் அமைந்துள்ளன. இது அதிமுக, திமுக இரண்டையும் ஒரே நேரத்தில் சீண்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்தப் போஸ்டர் விஜய்யின் கவனத்திற்கு வராமல் ஒட்டப்பட வாய்ப்பில்லை. காரணம் தலைமை ரசிகர் மன்ற பெயர் தான் உள்ளது என்பதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் போஸ்டரை ரசிகர் ஒருவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி கவனியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *