விஜய் அரசியலுக்கு வருவார் – பழ.கருப்பையா உறுதி

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு உறுதியாக  வருவார் என்றும், ஆனால் எப்போது வருவார் என்பதுதான் தெரியவில்லை என்றும் பழ.கருப்பையா தெரிவித்தார்.

சர்கார் திரைப்படம் செய்தியாளர்களிடம் பேசிய பழ.கருப்பையா “இந்த படம் நிகழ்கால அரசியலைச் சொல்லியிருக்கும் படம். சினிமாவுக்கு தணிக்கைக் குழு என்று இருக்கிறது. அந்தக் குழு பார்த்துவிட்டு, படத்தை வெளியிடத் தடையில்லை என்று சொல்லி சர்டிபிகேட் கொடுத்துவிட்டது. இப்போது அதை நீக்கு இதை நீக்கு என்று சொன்னால் எப்படி?

இதற்கு ஓட்டெடுப்பு நடத்தியா, காட்சிகளை வெட்டிக்கொண்டிருக்கமுடியும்? அப்படியெனில் தணிக்கைக் குழுவெல்லாம் எதற்கு? தேவையே இல்லையே. நிகழ்கால அரசியலைச் சொல்லும்போது, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வலிக்கத்தான் செய்யும். மதிக்கும்படியான அரசியல் சூழல் இருந்தால் பிரச்சினையில்லை. இங்கே மதிக்கத்தக்க அரசியலே இல்லை. கமிஷன் வாங்காத துறைகளே இல்லை. ஊழல் இல்லாத துறைகளே இல்லை. மணலைக் கூட இன்றைக்கு வெளிநாட்டில்  இருந்து இறக்குமதி செய்யும் கேவலமான நிலையில் இருக்கிறோம்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அற்புதமான இயக்குநர். பல இடங்களில் சிறப்பான முறையில் வசனங்களை எழுதியிருக்கிறார். ஒரு தொகுதிக்கு மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அந்த மூன்று பேரில் மக்கள் ஒருவரை தேர்வு செய்து, வேட்பாளராக்குவது என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதேசமயம், இந்த மோசமான அரசியல் சூழல்கள் மாறவேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

அதேபோல், நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயமாக வருவார். அவரிடம் பலமுறை பேசியதில் இதைப் புரிந்துகொண்டேன். நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், கோடிகோடியாய் சம்பளம் என ஒருகுறைவுமில்லை. என் மேல் இத்தனை அன்பு கொண்ட மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். எனவே, விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் எப்போது வருவார் என்றுதான் தெரியவில்லை என்று பழ.கருப்பையா தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *