வானம் கொட்டட்டும் – திரை விமர்சனம்!

Share on

வாழை விவசாயத்துக்குப் பெயர் பெற்ற தேனி மாவட்ட கிராமம் ஒன்றில் பாசமான சகோதரர்களாக வசித்து வருகின்றனர் அண்ணன் வேல் சாமியும் (பாலாஜி சக்திவேல்), தம்பி போஸும் (சரத்குமார்). அண்ணனைக் கொல்ல முயன்ற உள்ளூர்வாசி ஒருவரைக் கொலை செய்துவிட்டு, ஆயுள் சிறை தண்டனை அனுபவிக்கிறார் போஸ். அவரது மனைவி சந்திரா (ராதிகா), கணவனைப்போல பிள்ளைகள் முன் கோபிகளாக வளர்ந்துவிடக் கூடாது என்று கருதி, 10 வயது மகன், 5 வயது மகளை அழைத்துக்கொண்டு சென்னையில் குடியேறி வாழ்கிறார்.

16 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து விடுதலையாகி வீட்டுக்கு வருகிறார் போஸ். ஆனால், வளர்ந்து நிற்கும் பிள்ளைகள் அவரிடம் ஒட்டாமல் ஒதுங்குகின்றனர். அதே வேளையில், போஸ் செய்த கொலையால் அப்பாவை இழந்த இரட்டையரில் ஒருவரான நடராஜ் (நந்தா) 16 வருட வன்மத்துடன் காத்திருக்கிறார். பழிவாங்கும் பகடை ஆட்டத்தில் போஸுக்கு என்ன ஆனது? பிள்ளைகள் அவரை அப்பாவாக ஏற்றார்களா, இல்லையா என்பது கதை.

தனது உதவி இயக்குநருக்காக மணிரத்னம் தயாரித்துள்ள படம். குடும்பக் கதைகள் அருகிவரும் காலத் தில், துணிந்து உணர்ச்சிகளின் குவிய லாக ஒரு குடும்பக் கூட்டாஞ்சோறு போன்ற கதையை முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் தனசேகரன்.

அண்ணன் – தம்பி இடையிலான ரத்த பாசம், கணவன் – மனைவி இடையிலான அறுபடாத பந்தம், பெற்றோர் – பிள்ளைகள் இடை யிலான பாசம், பிள்ளைகளின் காதல் என ஒரு குடும்பக் கதைக்கு தேவை யான விஷயங்களுக்குள் பழிவாங்கும் உணர்ச்சியை புகுத்தி, ஒரு குடும்ப நாடக திரில்லர் படத்துக்கான அம்சங் களை அளவாகவும், அழகாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர். படம் தொடங்கி முடியும் வரை கிராமம், நகரம் என கதைக் களம் மாறி மாறி சுற்றிவருவது திரைக்கதையின் இடை நில்லா ஓட்டத்துக்கு உதவுகிறது.

இருப்பினும், திரைக்கதையில் சரிவர ஒட்டாத சில விஷயங்களும் இருக் கவே செய்கின்றன. சரத்குமார் விடுதலை யாகி வந்ததும் பிள்ளைகள் ஏன் அவரிடம் ஒட்ட மறுக்கின்றனர் என்பதற்கு படத்தில் வலுவான கார ணங்கள் சொல்லப்படவில்லை.

மடோனா செபாஸ்டின் குடும்பக் காட்சிகள் பிரதான கதையுடன் கோந்து போட்டு ஒட்டவைக்கப்பட்டுள்ளன. கணவன் இல்லாமல் பிள்ளைகளை வளர்க்கும் ஒரு தாயின் போராட்டம், பழி வாங்கும் உணர்ச்சியுடன் சுற்றிவரும் ஒருவரது வன்மம் ஆகிய இரண்டு முக்கிய இழைகளுக்கு அப்பால், காதலை ஒரு பண்டம்போல கதையில் திணித்திருக்கிறார் இயக்குநர். பழி வாங்க காத்திருந்தவர், ஒரு நிமிட வசனத்தில் மனம் மாறுவது வழக்கமான மாவு.

சுபாஷ் கதாபாத்திரத்தில் அழ காகவும், இயல்பாகவும் தனது பாணியை தவிர்த்து நடித்திருக்கிறார் சரத்குமார். பாலாஜி சக்திவேல் நடிக் கப் பிறந்தவர்போல, அண்ணன் கதாபாத் திரத்தில் அவ்வளவு இயல்பு. இந்த இருவரையும்விட ஆச்சரியப்படுத்து பவர் ராதிகா. தனது மிகை நடிப்பை முற்றிலும் கைவிட்டு, இயக்குநர் கேட்ட சந்திராவை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

சரத்குமார் – ராதிகாவின் மகனாக வரும் விக்ரம் பிரபுவுக்கு நடிக்க வாய்ப் புள்ள ஒரு படம். அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்த வேடத்திலும் பொருந்தும் ஐஸ் வர்யா ராஜேஷ் மகளாகவும், தங்கையாக வும் நிறைவு. இந்தப் படத்தில் சாந்தனுவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.

மடோனா செபாஸ்டின், நந்தா, அமிதாஷ் என பெரிய நட் சத்திரப் பட்டாளம் இருப்பது பார்வை யாளர்களைப் படத்துடன் ஒன்றியிருக்க உதவுகிறது. கிராமம், நகரம் ஆகிய இரு களங்களையும் கதைக்கு தேவை யான அளவையும் தாண்டி விரித்துக் காட்டி திரையிலேயே நம் கண்களைக் கட்டி வைத்திருக்கிறது பிரீத்தா ஜெய ராமனின் ஒளிப்பதிவு.

ஆத்திரத்தில் ஒருவர் செய்யும் செயல், அவரது குடும்பத்தை எப்படி அலைக்கழித்து அல்லாட வைக்கிறது என்பதையும், பழிவாங்கும் உணர்ச்சி தொடரக் கூடாது என்பதையும் உணர்ச்சி களின் தூறலாய்.. ஒரு முன்அந்திச் சாரல்போல சொல்லிச் செல்கிறது படம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *