திருவையாறு, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியாற்றில் கடைமுக தீர்த்தவாரி கோலாகலம்!!

Share on

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினர். சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்தநடனம் மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில் தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம்மதீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரீரி கூறியது. அதைக்கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிர்ம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்து மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றார்.

சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வரவேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு பாவங்களை போக்கி அருள்பாலிக்க வேண்டும் என்று வரம் வாங்கினார்.

கங்கையானவள் தனது பாவங்களை போக்க இறைவனை வேண்டியபோது மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் நீராடி உன் பாவங்களை போக்கிக்கொள் என்றார். அதே போன்று கங்கையானவள் மயிலாடுதுறைக்கு சென்று ஐப்பசி மாதத்தில் நீராடி தனது பாவங்களை போக்கிகொண்டதாகவும், கங்கையை தொடர்ந்து நாட்டின் அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் புனித நீராடியதாக ஐதீகம். இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதேபோல் இவ்வாண்டு கடந்த அக்டோபர் 18ம் தேதி துலா உற்சவ தொடக்க தீர்த்தவாரியும், 27ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும் நடந்தது. அதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் கடைசிபத்துநாள் உற்சவம் தொடங்கி 13ம் தேதி திருக்கல்யாணமும், 15ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர்,விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர்.

தெற்கு கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் முன்னிலையிலும் காவிரிதுலாக்கட்டத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மதியம். 2.45 மணியளவில் சுவாமி தீர்த்தம் கொடுக்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாணதம்பிரான், சிவபுரம்வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாச்சாரியார், வணிகர் சங்க தலைவர் செந்தில்வேல் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மகாதானத்தெருவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வர்த்தக சங்கம் சார்பில் திருமணமண்டபத்தில் அன்னதானம் வழங்கினர். திருவையாறு: தஞ்சை மாவட்ட திருவையாறு புஷ்யமண்டபத்தெரு காவிரிஆற்று படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தா–்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டு சென்றனர். அம்மன் உடனாகிய ஐயாறப்பர் புஷ்பமண்டபடித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பரை வழிபட்டனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *