தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு திருப்பூரை சேர்ந்த மாணவி தேர்வு: திறமையை மிஞ்சும் வறுமை

திருப்பூர் : மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள தேசிய கராத்தே போட்டிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவி, பங்கேற்க செல்ல போதிய நிதியின்றி தவித்து வருகிறார்.
திருப்பூர், பல்லடம் ரோடு, பாரதி நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி ரம்யா, கடந்த நவ., 4 ம் தேதி ஈரோட்டில் நடந்த மாநில கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் ‘ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா’ சார்பில் ம.பி., மாநிலம் இந்துாரில் நடக்கவுள்ள தேசிய கராத்தே போட்டிக்கு (14 வயது பிரிவில்) தேர்வு செய்யப்பட்டார். இவரது பெற்றோர் மகேஷ்வரன் – சாந்திதேவி. இருவரும் பனியன் தொழிலாளர். வீட்டில் மூன்று பெண் குழந்தைகள்; ரம்யா கடைக்குட்டி.
கராத்தே மீது அலாதி பிரியம் கொண்ட இவர், அதிகாலையில் கராத்தே பயிற்சி தினமும் மேற்கொள்கிறார். டிச., 25ம் தேதி இவருக்கான போட்டி மத்திய பிரதேச மாநிலத்தில் துவங்கவுள்ளது. நாளை (22ம் தேதி) மாலை திருப்பூரில் இருந்து ரயில் மூலம் மத்திய பிரதேசம் புறப்படுகிறார்.
ரம்யாவின் பெற்றோர் கூறுகையில்,’கலெக்டர், பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம், லயன்ஸ் கிளப் என பலரும் நிதி உதவி செய்துள்ளனர். இருப்பினும், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். நிதியுதவி கிடைக்கும்பட்சத்தில், தொடர்ந்து, 10 நாட்கள் தங்கி பங்கேற்போம்,’ என்றனர். 

ரம்யாவின், பெற்றோரை, 77085 75989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *