கூட்டணி நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளேன் – திருமாவளவன்

சென்னை: கூட்டணி குறித்து பேசிய வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளவன் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள்வோம் என  தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “தி.மு.க கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்க வேண்டாம். தமிழகத்தில் யாரும் யாரையும் சந்திக்கலாம். ஆனால், தேர்தல் கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகத் தெளிவாக உள்ளது. நான் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை முதல்வரை நேரில் சந்தித்தேன். நேற்று கொத்தமங்களத்தில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது டி.டி.வி.தினகரனை எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்புகள் அனைத்தும் மக்களுக்காக மக்கள் களத்தில் நிகழ்ந்தவை.

ஆனால், தேர்தல் களத்தைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்று சேர்வது என்பது உறுதியாக உள்ளது. தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, முஸ்லீம் இயக்கங்கள் ஆகிய கட்சிகள் அனைத்தும் இணக்கமாகவே உள்ளன. தி.மு.க-வைப் பின்தொடர்ந்து நாங்கள் தோழமைக் கட்சிகளாக உள்ளோம். இது வருங்காலத்தில் கூட்டணியாவதற்கும் வாய்ப்புள்ளது. தி.மு.க, தற்போது கூட்டணி இல்லை எனக் கூறியதால் அதில் ம.தி.மு.க-வும் வி.சி.க-வும் இல்லை எனக் கூற முடியாது. பிற்காலத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள்வோம். நிச்சயம் இந்தக் கூட்டணி வலுப்பெறும். திட்டமிட்டே சில பேர் தி.மு.க-வை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *