கூடலூர்-கேரள எல்லையில் அட்டகாசம் செய்த சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்கியது!

Share on

கூடலூர்- கேரள பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை, புலி, காட்டெருமைகள், சிறுத்தைப்புலி, கரடிகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி ஊருக்குள் வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூடலூர்- கேரள எல்லையான சுல்தான்பத்தேரி பகுதியில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்தது.

மேலும் சுற்றுவட்டார கிராமப்புற மக்களின் கால்நடைகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்தது.இதனால் கடந்த வாரம் சுல்தான்பத்தேரி வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடித்தனர். அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் சுல்தான்பத்தேரி பகுதிக்குள் புகுந்து சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்தது. மேலும் இரவில் கால்நடைகளை கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சுல்தான்பத்தேரி அருகே உள்ள பொன்குழி கிராமத்தை சேர்ந்த வாலிபர் வினி‌‌ஷ் (வயது 28) என்பவர் தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது புதர்மறைவில் இருந்த சிறுத்தைப்புலி வினி‌‌ஷ் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத வினி‌‌ஷ் சிறுத்தைப்புலியிடம் சிக்கினார்.

தொடர்ந்து அவரை சிறுத்தைப்புலி கடித்தது. இதனால் அவர் சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அப்பகுதிக்கு ஓடி வந்தனர். இதனால் சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர் படுகாயம் அடைந்த வினிஷை மீட்ட பொதுமக்கள் சுல்தான்பத்தேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையொட்டி சுல்தான்பத்தேரி வனச்சரகர் சுனில்குமார் தலைமையிலான வனத்துறையினர் பொன்குழி கிராமத்தில் சிறுத்தைப்புலியை பிடிக்க இரும்பு கூண்டை வைத்தனர். மேலும் அதன் உள்ளே இறைச்சிகளை போட்டு ரகசியமாக கண்காணித்தனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதிக்குள் வந்த சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சென்று இறைச்சி துண்டுகளை தின்றது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்கியது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் முத்தங்கா சரணாலய கால்நடை டாக்டர் அருண்சக்கரியா ஆகியோர் அங்கு வந்து கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர். அப்போது அந்த சிறுத்தைப்புலி மிகவும் ஆக்ரோ‌‌ஷமாக இருந்தது. இதையொட்டி கால்நடை டாக்டர் அருண் சக்கரியா சிறுத்தைப்புலிக்கு மயக்க ஊசியை செலுத்தினார். சிறிது நேரத்தில் சிறுத்தைப்புலி மயங்கியது. பின்னர் அதை வனத்துறையினர் வெளியே தூக்கி வந்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் சிறுத்தைப்புலியின் உடலை பரிசோதித்தனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் சிறுத்தைப்புலியை கூண்டுக்குள் வனத்துறையினர் அடைத்தனர். பின்னர் கூண்டோடு சிறுத்தைப்புலியை முத்தங்கா சரணாலயத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பிடிபட்ட சிறுத்தைப்புலியை திருவனந்தபுரம் மிருககாட்சி சாலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர். அட்டகாசம் செய்த சிறுத்தைப்புலி பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *