காஷ்மீர் நடவடிக்கை, சிஏஏக்கு எதிராக விமர்சனம் எதிரொலி – மலேசிய பாமாயில் இறக்குமதி செய்தால் அவ்ளோதான்!

Share on

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யக்கூடாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இறக்குமதியாளர்கள் இந்தோனேஷியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக தடை அறிவிக்காவிட்டாலும், காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) மலேசிய பிரதமர் விமர்சித்ததை தொடர்ந்து மத்திய அரசு இவ்வாறு எச்சரிக்கை செய்திருப்பது, மலேசியாவை குறிவைத்து நடத்தப்படும் பொருளாதார தாக்குதலாக கருதப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநர் ஜெனரல் அலுவலகம் சார்பில், பாமாயில் இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்படி உரிமம் இருந்தால்தான் பாமாயில் இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியது. உலக அளவில் பாமாயில் இறக்குமதி அதிகம் செய்வது இந்தியாதான். மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

ஆண்டுதோறும் இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் இருந்து 9 மில்லியன் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் முந்தைய நிதியாண்டை விட மலேசிய பாமாயில் இறக்குமதி 18.82 சதவீதம் சரிந்துள்ளது. அரசு எச்சரிக்கையால் தற்போது மேலும் சரிவை சந்தித்துள்ளது. புதிய கட்டுப்பாடு குறித்து, பாமாயில் இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் சிலர் கூறியதாவது: மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதற்கு அதிகாரப்பூர்மாக தடை விதிக்கப்படவில்லை.

அதேநேரத்தில், மலேசிய இறக்குமதியை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படியே இறக்குமதி செய்தாலும், சரக்கை துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டுவர முடியாது. இதனால், கூடுதல் விலையாக இருந்தாலும் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளோம். மலேசிய பாமாயில் டன்னுக்கு 800 டாலராக உள்ளது. இந்தோனேஷியாவில் 10 டாலர் அதிகம்.

இதனால் எங்களின் லாபமும் குறைந்து விடும். மலேசியாவில் இருந்து இறக்குமதியை நிறுத்துவதால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்ய இந்தோனேஷியா தயாராக உள்ளது. எனவே, பாமாயிலுக்கு  தட்டுப்பாடு ஏற்படாது. எனினும், விலை அதிகரிக்கலாம் என்றனர். மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள மறைமுக தடைக்கு, நேபாளம் கவலை தெரிவித்துள்ளது. மலேசிய பாமாயில் சுத்திகரிப்பில் நேபாளம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன பொம்மை, டிவி இறக்குமதிக்கும் தடை வருகிறது
வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பொம்மைகள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும், சுமார் 4,500 கோடி மதிப்பிலான பொம்மைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இறக்குதி செய்யப்பட்டுள்ளன. இதில், சீனாவில் இருந்து மட்டும் 3,200 கோடி மதிப்பில் பொம்மைகள் இறக்குதி செய்யப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதுபோன்றே சில முன்னணி நிறுவனங்கள் கூட சீனா மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து மலிவு விலையில் டிவிக்களை இறக்குமதி செய்கின்றன.

இதுபோல், சில டிவி உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்கின்றன.  கடந்த நிதியாண்டில் மட்டும் டிவி உட்பட எலக்ட்ரானிக் மற்றும் மின்சார பொருட்கள் இறக்குமதி நாட்டின் ஒட்டு மொத்த இறக்குமதியில் 10 சதவீதமாக இருந்துள்ளது. அதாவது சுமார் 36,000 கோடி மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி ஆகியுள்ளன. 2018 ஏப்ரல் முதல் நவம்பர் வரை மட்டும் இந்த இறக்குமதி மதிப்பு 11 சதவீதம் அதிகரித்து சுமார் ₹25,000 கோடியாக உள்ளது. எனவே இத்தகைய பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதன் மூலம், சீன பொருட்கள் இறக்குமதியை வெகுவாக தடுக்க முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விலை உயரும் அபாயம்
இறக்குமதி குறைவதால் மலேசியா பாதிப்பு அடைவது ஒருபுறம் இருக்க, இந்தோனேஷியாவில் இருந்து குறைந்த லாபத்தில் இறக்குமதி செய்வதால், பாமாயில் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளன. அதோடு, ரேஷனில் வழங்கப்படும் மானிய விலை பாமாயிலுக்கு அதிக கிராக்கி வரும். கள்ளச்சந்தையில் அவை விற்கப்படலாம் என வர்த்தகர்கள்
தரப்பில் கூறுகின்றனர்.

மலேசியாவுக்கு பலத்த அடி
இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் 2.8 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியில் 4.5 சதவீதம் பாமாயில் பங்களிப்பு உள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *