ரோஹித் சர்மா தலைமையில் முதல் டி-20 போட்டி- கொல்கத்தாவில் இந்தியா – மே.இ.தீவுகள் இன்று மோதல்

கொல்கத்தா:  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கான முதலாவது டி 20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று கொல்கத்தாவில் மோதுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 எனவும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-1என்ற கணக்கிலும் இந்திய அணிவென்றது. இந்நிலையில் இரு அணிகளும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

விராட் கோலி, தோனி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா தலைமையில் டி 20 தொடரை சந்திக்கிறது இந்தியஅணி. சர்வதேச டி 20 ஆட்டங்களில் தோனியின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படும் சூழ்நிலையில் அதிலும் சொந்த மண்ணில் அவர், இல்லாமல் இந்திய அணி களமிறங்க உள்ளது. டி 20ஆட்டங்களில் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு தொழில்முறை போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்கள் என்பதால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அந்த அணி கடும் சவால் அளிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷாபாஸ் நதீம், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ்.

மேற்கிந்தியத் தீவுகள்: கார்லோஸ் பிராத் வெயிட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, சிம்ரன் ஹெட்மையர், கீமோ பால்,கெய்ரன் பொலார்டு, தினேஷ் ரம்தின், ஆந்த்ரே ரஸல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஒஷேன் தாமஸ், ஹரி பியர்ரே, ஒபெட் மெக்காய், ரோவ்மான் பொவல், நிக்கோலஸ் போரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *