Rajinikanth comments on sabarimala

நேற்றைய சர்ச்சை கருத்துக்களுக்கு இன்று விளக்கமளித்த ரஜினிகாந்த் !

சென்னை: நேற்று செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்களுக்கு இன்று அவர் விளக்கமளித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் பாஜக மற்றும் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேர் பற்றிய கேள்விகளை எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் கூறிய பதில் குழப்பமானதாக இருந்ததோடு அது சர்ச்சைக்குரிய வகையில் வேகமாக பரவி வந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர்.  ராஜீவ் காந்தி  வழக்கில் தொடர்புடைய 7 பேர் என்று கேட்டிருந்தால் நான் கூறி இருப்பேன்.  மொட்டையாக அந்த 7  பேர் என கேட்டதால் எந்த 7 பேர் என கேட்டேன். ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள   7 பேரை பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.  மனிதாபிமான அடிப்படையில் அந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும் பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், எதிர்க்கட்சிகளுக்கு அது ஆபத்தான கட்சி தான். ஒருவரை 10 பேர் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால்  யார் பலசாலி, அந்த ஒருவரா இல்லை 10 பேரா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார். பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யவேண்டும். நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வேன். அதேபோல அமைச்சர்கள் நாகரீகமான முறையில் கருத்து தெரிவிப்பது நல்லது. இலவசங்கள் 100 சதவீதம் தேவை, அது ஓட்டுக்காக இருக்க கூடாது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *