தீபிகா படுகோனின் சபாக் படத்தில் அமிலம் வீசியவரின் பெயர் ராஜேஷ் என மாற்றப்பட்டதா!

Share on

தன்னை ஒருதலையாகக் காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் 15-வது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால், தன்னம்பிக்கையுடன் போராடி அவனுக்குச் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டுதலைப் பெற்ற லட்சுமி அகர்வால், சில ஆண்டுகள் கழித்து அலோக் தீட்சித் என்பவரைக் காதலித்து ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார்.

தன்னைப் போன்று அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சண்டிகரில் சமூக அமைப்பு ஒன்றை லட்சுமி அகர்வால் துவங்கியுள்ளார்.  

இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் மற்றும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார். லட்சுமி அகர்வால் வேடத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். சபாக் (Chhapaak) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், மிரிகா புரொடக்‌ஷன்ஸ், தீபிகா படுகோனின் கா புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் லட்சுமி மீது அமிலம் வீசியவரின் பெயர் ராஜேஷ் என மாற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. நிஜத்தில் அமிலம் வீசியவரின் பெயர் நதீம் கான் என்று இருக்கும்போது மதத்தை மாற்றி, வேறொரு பெயர் வைக்கவேண்டிய அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால், நேற்று ப்ரீமியர் ஷோவில் படத்தைப் பார்த்தவர்கள், அமிலம் வீசியவரின் பெயர் பஷீர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள். தீபிகாவின் காதலர் பெயர் தான் ராஜேஷ் எனவும் தகவல் அளித்துள்ளார்கள். 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *