ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்கள் தான் தேர்வு செய்தோம் – டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி

புதுடெல்லி: ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது நாங்கள் தான் என பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளதாகவும், மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் டசாலட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராபியர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ரபேல் விமான விமானங்கள் தயாரித்து வழங்க இந்தியாவின் எங்கள் தொழில் பங்குதாரராக அம்பானி நிறுவனத்தை நாங்களாக தான் தேர்வு செய்தோம். நான் பொய் சொல்லவில்லை. ரிலையன்ஸ் அல்லாமல் வேறு 30 தொழில் பங்குதாரர்கள் உள்ளனர். டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. விமானங்கள் தயாரிப்பில் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 284 கோடி ரூபாய் டசால்ட் நிறுவனம் வழங்கியதாக கூறுவது தவறு. இரு நிறுவனங்களும் இணைந்து செயலாற்ற அந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகை டசால்ட் நிறுவனத்துக்கும் சொந்தமானது.

டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி 49 சதவீத பங்குத்தொகை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், 51 சதவீத பங்குத்தொகை டசால்ட் நிறுவனத்துக்கும் உரியது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்கள் செய்வதில் அனுபவம் இல்லை என்பது எங்களுக்கு தெரியும். விமானங்களை செய்வதில், அதை வடிவமைப்பதில் எங்கள் பொறியாளர்கள், ஊழியர்கள் திறன் மிக்கவர்கள். அவர்களை நம்பியே நாங்கள் தொழில் செய்கிறோம்.

அதேசமயம், மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் போன்ற வேறு ஒரு நிறுவனமும் முதலீடு செய்ய வருவது எங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பணிகளை செய்வதன் மூலம் இந்தியாவில் வளர்ச்சி அடைய அவர்களுக்கும் ஏதுவாக இருக்கும். இது முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்கள் தேர்வு செய்தோம்.

ரிலையன்ஸ் நிறுவனத்தை நம்பி, டசால்ட் நிறுவனம் விமானங்களை தயாரிக்க முனைந்ததாக கூறி பிரச்சினையை திசை திருப்புகின்றனர். அது முற்றிலும் தவறானது.  காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சியுடன் எங்கள் நிறுவனத்துக்கு நீண்ட தொடர்பு உண்டு. 1953-ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கு நாங்கள் தொழில்நுட்ப உதவி, தளவாடங்கள் விற்பனை செய்துள்ளோம்.

அதன் பிறகு பல கட்சிகள் இந்தியாவில் ஆட்சியில் இருந்தபோதும் எங்கள் வர்த்தகம் நடந்துள்ளது. எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை நாங்கள் பார்ப்பதில்லை. இந்திய அரசுடன் தான் நாங்கள் ஒப்பந்தம் செய்கிறோம்.

இவ்வாறு எரிக் டாபியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *