பெண் துப்புரவு ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனியார் துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

பெண் துப்புரவு ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனியார் துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை ரெயில் நிலையத்தில் தனியார் துப்புரவு தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்தினர் செய்து வருகிறார்கள். இதில் தஞ்சையை சேர்ந்த ஒருவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் துப்புரவு பெண் ஊழியர் ஒருவருக்கு கடந்த சில வாரங்களாக போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் நேரிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவர்கள் ரெயில் நிலைய சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து மேற்பார்வையாளர் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் மீண்டும் தஞ்சைக்கு வந்து பணியாற்றி உள்ளார். மேலும் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் செய்த பெண்ணுக்கு வேலை இல்லை என கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் அனைவரும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தஞ்சையில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அங்கு வந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரெயில் நிலையத்தில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டன. ஊழியர்களின் போராட்டத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *