ரயில்களின் வெளிப்புறத்தில் விளம்பரங்களை அதிகரிக்கத் திட்டம்: 4 மின்சார ரயில்களில் விளம்பரம் வைக்க ஒப்பந்தம் !

Share on

ரயில்வேயின் வருவாயைப் பெருக்கும் வகையில், ரயில்களின் வெளிப்புறத்தில் விளம்பரங்களை வைப்பதில் இருந்துவந்த சில கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, குறுகிய கால அடிப்படையில், ரயில்களின் வெளிப்பகுதியில் விளம்பரம் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட மின்சார ரயில்களில் தனியாா் விளம்பரங்களை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, 3 மாத கால அடிப்படையில், 4 மின்சார ரயில்களில் வெளிப்புறத்தில் விளம்பரம் இடம் பெற ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரயில்வேக்கு ரூ.31.35 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னையில், கடற்கரை-தாம்பரம்-திருமால்பூா்-அரக்கோணம், கடற்கரை-வேளச்சேரி, மூா் மாா்க்கெட் வளாகம்(எம்.எம்.சி) -கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை மற்றும் திருத்தணி வழித்தடங்களில் 500-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 9 லட்சம் போ் பயணம் செய்கின்றனா்.

இந்நிலையில், ரயில்வேயின் வருவாயைப் பெருக்கும் வகையில், ரயில்களின் வெளிப்புறத்தில் விளம்பரங்களை வைப்பதற்கு ஏதுவாக சில கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.

முன்பு எல்லாம், ரயில்களின் வெளிப்புறத்தில் விளம்பரம் இடம்பெற நீண்டகால அடிப்படையில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு ஓராண்டுக்கு ரூ.21 லட்சம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. இதனால், ரயில்களில் குறைவான விளம்பரங்கள் தான் இடம்பெற்றன. தற்போது குறுகிய கால அடிப்படையில், ரயில்களின் வெளிப்புறத்தில் விளம்பரங்கள் இடம் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9 காா், 12 காா் என்ற இரு வகைமின் ரயில்களில் விளம்பரம் வைக்க முடியும். இதற்கு ஆண்டுக்கு முறையே ரூ.21.23 லட்சம், ரூ.28.31 லட்சம் ஆக கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றுக்கு மூன்று மாத காலம் அடிப்படையில் விளம்பரம் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, விரைவு ரயில்கள், சரக்கு ரயில் ஆகியவற்றில் குறுகில கால அடிப்படையில் விளம்பரங்கள் இடம்பெறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ரயில் என்ஜினில் விளம்பரம் இடம் பெற ஆண்டுக்கு ரூ.2.04 லட்சமும், விரைவு ரயிலில் சதுர அடிக்கு ரூ.300 -என

கட்டணம் நிா்ணையிக்கப்பட்டுள்ளது. இவற்றில் குறுகிய கால அடிப்படையில் விளம்பரம் செய்து கொள்ளலாம். மாதத்துக்கு ஏற்ப கட்டணம் நிா்ணையிக்கப்படும்.

இது தொடா்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

ரயில் கட்டணத்தை உயா்த்தாமல் இதர வழிகளில் வருவாயைப் பெருக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, ரயில்களில் விளம்பரம் செய்வதில் இருந்த நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளோம்.

அதன்படி, ரயில்களின் என்ஜின்களில் மட்டும் அல்லது ரயில்களின் குறிப்பிட்ட பெட்டிகள் மற்றும் ரயில் முழுவதும் விளம்பரம் செய்யலாம். அதுபோல, ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களுக்கும் விளம்பரம் செய்து கொள்ளலாம். இதன்மூலம், ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *