குல்தீப் செங்கார் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Share on

உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து குல்தீப் செங்கார் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் கிராமத்தை சேர்ந்த இளம் பெண், 17 வயது சிறுமியாக இருந்தபோது, கடந்த 2017ம் ஆண்டு அம்மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். ஆனால், செங்காரின் செல்வாக்கு மற்றும் அழுத்தம் காரணமாக அப்பெண்ணின் புகாரை விசாரிக்காமல் போலீசார் இழுத்தடித்து வந்தனர். அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் இறந்தார்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக அப்பெண் ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்திற்கு தனது வக்கீல் மற்றும் தனது அத்தைகள் ஆகியோருடன் கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் சென்ற காரின் மீது லாரி மோதி  விபத்துக்குள்ளானது. இதில், அப்பெண்ணின் வக்கீல் மற்றும் இரு அத்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அப்பெண்ணும், அவரது தாயாரும் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குல்தீப் சிங் செங்கார், அவரது கூட்டாளி சசி சிங் மற்றும் செங்காரின் சகோதரர்கள் 9 பேர் உள்ளிட்டோர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் பூதாகரம் ஆனதால், செங்காரை கட்சியிலிருந்து நீக்கி கடந்த ஆகஸ்டு மாதம் பாஜ தலைமை உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 9ம் தேதி செங்காருக்கு எதிராக டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிபிஐ தரப்பில் 13 சாட்சிகளும், செங்கார் தரப்பில் 9 சாட்சிகளும் நீதிபதி முன்பாக வாக்குமூலம்  அளித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர் மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். தனது உத்தரவில் குல்தீப்சிங் செங்காரை போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவித்தார். அதே சமயத்தில் மற்றொரு குற்றவாளியான சசி சிங்கை அனைத்து பிரிவுகளிலிருந்தும் விடுவித்து உத்தரவிட்டார்.

உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி குல்தீப்சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்து டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து குல்தீப் செங்கார் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *