மாநகராட்சி-நகராட்சிக்கு தேர்தல் வருவது சந்தேகம்: முக ஸ்டாலின்!

Share on

சென்னை:கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி அமைப்புத் தேர்தலாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.

ஏற்கனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு வெற்றி பெறக்கூடிய நிலையில் இருந்தோம். ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆளுங் கட்சியாக இருக்கும் நேரத்தில் இடைத்தேர்தல் வரும் போது பெரும்பாலும் ஆளுங்கட்சி தான் வெற்றிபெறும்.

மக்களுடைய எண்ணம் எப்படி இருந்தாலும், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல், இவற்றையெல்லாம் தாண்டித்தான் அந்த தேர்தலை சந்தித்தோம். ஆனாலும் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

நாடாளுமன்ற தேர்தலின்போது, சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. ஏற்கனவே அ.தி.மு.க.விடம் இருந்த இடங்களில் 9 இடங்களைக் கைப்பற்றியது. அது பெரிய வெற்றி.

எதிர்க்கட்சியாக இருந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதில் எவ்வளவு பிரச்சினை? உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். உச்சநீதிமன்றத்திற்கு சென்றோம்.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது சி.சி.டி.வி. வைக்க வேண்டும் என கோரினோம்.

இதற்கிடையே வேலூர் மாவட்டத்தை 3 ஆகப் பிரித்தார்கள். விழுப்புரம், திருநெல்வேலி மாவட்டங்களை இரண்டாகப் பிரித்தார்கள்.

மாவட்டங்களைப் பிரித்து விட்டு தேர்தல் நடத்தும்போது அதில் இடஒதுக்கீடு வழங்க சட்டச்சிக்கல் இருக்கிறது என்று நீதிமன்றத்திற்குச் சென்றோம்.

தி.மு.க.வின் நியாயமான கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு 9 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் தேர்தல் நடத்த உத்தரவு போட்டது.

நினைத்துப் பாருங்கள். சி.சி.டி.வி. மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், உள்ளாட்சித் தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்க முடியுமா? முடியவே முடியாது.

நீதிமன்றத்திற்கு நாம் போனதால்தான் இந்த உத்தரவு கிடைத்தது. 2-வது முறை ஜெயலலிதா முதல்வராக வந்தபிறகு என்னைத் தோற்கடிக்க எவ்வளவோ முயற்சி செய்தார்கள்.

அவற்றை எல்லாம் தாண்டி 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டிய நான், வெறும் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றன.

எதற்காக சொல்கிறேன் என்றால், இந்த உள்ளாட்சி தேர்தலிலும் அதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் ஊரகப் பகுதிகளில் மட்டும்தான் தேர்தல் நடைபெற்றது.

இன்னும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கவில்லை.

நடந்திருந்தால் நிச்சயமாக சென்னையில் நம்முடைய மேயர்தான் தற்போது கொடி கட்டி உட்கார்த்திருக்க கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும். வந்திருக்கும் தேர்தல் முடிவுகளை பார்த்தால் தேர்தலை நடத்துவார்களா? என்பது கேள்விக்குறிதான்.

எப்படியும் தி.மு.க. தான் விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறது. வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துவோம்.

உள்ளாட்சி அமைப்பில் இன்றைக்கு ஊராட்சி கவுன்சிலராக இருந்தாலும் வெற்றி பெற்றவர்களுடைய எண்ணிக்கை அ.தி.மு.க.வை விட அதிகமாகத்தானே வந்தது.

ஒரு சீட்டு அதிகமாக இருந்தாலே, அவர்கள் தானே பெரும்பான்மை பெற்றவர்கள்.

ஆனால், அது வளர்பிறை; இது தேய்பிறை என்று விமர்சனம் செய்கிறார்கள், எது வளர்பிறை? எது தேய்பிறை?

இது கூட ஆளும் கட்சியில் இருக்கும் அமைச்சர்களுக்கு தெரியாதா?

எத்தனை நாட்கள் இது நடக்கப்போகிறது என்று பார்ப்போம். விரைவில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது, இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வரும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *