Vilupuram

பெற்ற குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்!

விழுப்புரம்: விழுப்புரம்  அருகே பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவான கொடுமை நடந்துள்ளது.

கடலூர் கட்டமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரனுக்கும், விழுப்புரம் பெரிய பாபு சமுத்திரத்தைச் சேர்ந்த ஜெயசித்ராவுக்கும், 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் மிதுன் என்ற மகனும், லக்‌ஷன் என்ற 7 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். மகள் மகிழ்ச்சியாக மணவாழ்வு வாழ்கிறாள் என ஜெயசித்ராவின் குடும்பம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், என்ன காரணம் எனத்தெரியவில்லை. தனது குழந்தைகளை கொன்றுவிட்டு ஜெயசித்ரா தற்போது தலைமறைவாக இருக்கிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜெயசித்ராவின் இரண்டாவது குழந்தை லக்ஷன் வீட்டில் இருந்த அண்டா தண்ணீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டான்.

குழந்தை இறந்து கிடந்த நிலையில், தாயை தேடியபோது, ஜெயசித்ரா 3 நாட்கள் தலைமறைவாக இருந்தார். 3 நாட்கள் கழித்து தனது தந்தையை தொடர்புகொண்ட அவர், 7 மாத குழந்தை லக்ஷ்சன் மரணத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறியுள்ளார்.

ஆனால், குழந்தை இறப்புக்கு நான்தான் காரணம் என தனது கணவர் குடும்பத்தினர் கருதி தன்னை அடிப்பார்கள் என்ற அச்சத்தில் தலைமறைவாகிவிட்டதாக ஜெயச்சித்ரா கூறியுள்ளார். இதையடுத்து ஜெயசித்ராவின் தந்தை அவரை சமாதனப்படுத்தி வீட்டு அழைத்துவந்துள்ளார். கணவன் சிலம்பரசன் வீட்டாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பண்ருட்டி புதுப்பேட்டை காவல்துறையும் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். லக்ஷ்சன் மரணத்திற்கு வீட்டின் வாஸ்து சரியில்லாததும், என்றும், மொட்டை அடித்தபோது முடியை ஆற்றில் கரைக்காததும் காரணம் என்று ஜெயசித்ரா குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனால், வீட்டை மாற்றி, கடந்த மாதம் 28-ம் தேதி பணங்குப்பத்திற்கு தனது குடும்பத்தை சிலம்பரசன் மாற்றியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சிலம்பரசனின் தம்பி நினைவு நாளையொட்டி, சடங்கு செய்ய அனைவரும் சொந்த ஊரான கட்டமுத்துபாளையத்திற்கு சென்றுள்ளனர். சடங்கை முடித்துவிட்டு, அன்று இரவு தனது தாய், தந்தையை ஊரிலேயே விட்டுவிட்டு மனைவி ஜெயசித்ரா மற்றும் மகன் மிதுனுடன் சிலம்பரசன் பணங்குப்பத்திற்கு திரும்பியுள்ளார்.

காலை நேரத்தில், சிலம்பரசன் வேலைக்கு சென்று விட்டநிலையில்,ஜெயசித்ரா மற்றும் மகன் மிதுன்  வீட்டில்  தனியாக இருந்துள்ளனர். குழந்தை மிதுன் பள்ளிக்கு வரவில்லை என பள்ளியில் இருந்து சிலம்பரசனுக்கு தொலைபேசியில் தகவல் கொடுக்கப்பட்டது.

அதிர்ச்சியடைந்த சிலம்பரசன், உடனடியாக தான் வசித்துவரும் வீட்டின் உரிமையாளரை அழைத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கச்சொல்லியுள்ளார். அப்போது, வீடு திறந்திருப்பதாகவும், ஆனால் வீட்டில் யாரும் இல்லை என உரிமையாளர் அவருக்கு தகவல் கூறியுள்ளார்.

பின்னர் தனது பெற்றோரை அழைத்த சிலம்பரசன், அவசரமாக தனது வீட்டிற்கு சென்று மகனின் நிலை குறித்து பார்க்கச் சொல்லியுள்ளார். சிலம்பரசனின் பெற்றோர்கள் இருவரும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் ஜெயசித்ராவையும், குழந்தை மிதுனையும் காணவில்லை. இதை தொடர்ந்து வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் குழந்தை மிதும் சடலமாக மிதப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். இந்த சம்பவத்தை பார்த்த சிலம்பரசன், முதல் குழந்தையை ஜெய சித்ராதான் கொன்றிருக்க வேண்டும் என கோபம் அடைந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் தலைமறைவான ஜெயசித்ராவை தேடி வருகின்றனர்.

ஜெயசித்ராவை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், தனது குழந்தைகளை தாயே கொலை செய்ய என்ன காரணம் என்பதை ஜெயசித்ராவை கைது செய்தபிறகுதான் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார். மூன்று மாத கால இடைவெளிக்குள் இரண்டு குழந்தைகளையும் அடுத்தடுத்து இழந்ததால், சிலம்பரசன் குடும்பத்தினர் மிகுந்த மனவேதையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *