நடமாடும் அம்மா உணவகம்- விரைவில் தொடங்க மாநகராட்சி திட்டம் !

Share on

சென்னை:சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மற்றும் கண் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அம்மா உணவகங்களின் முக்கியத்துவம் குறைந்தது. இந்த திட்டத்தால் மாநகராட்சிக்கு வருடத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

அம்மா உணவகத்தில் காலை, மதியம், இரவு 3 வேளையும் மலிவான விலையில் உணவு பொருட்கள் கிடைத்தபோதும் கூட்டம் குறையத் தொடங்கியது.

அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு கூட ஒரு சில அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அம்மா உணவகத்தை மேம்படுத்தி மேலும் சிறப்பாக செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. விற்பனையை அதிகரித்து வருவாயை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நடமாடும் அம்மா உணவகம் என்னும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக முதலில் 3 வேன்கள் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளன. அந்த வேனில் உணவு பண்டங்களை வைத்து விற்பனை செய்ய வசதியாக மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 3 மண்டலங்களில் இந்த நடமாடும் அம்மா உணவக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

நடமாடும் அம்மா உணவகத்தை மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளை கண்டறிந்து, அங்கு நிறுத்தி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.

காலை டிபன், மதிய உணவு ஆகியவற்றை குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்.

அம்மா உணவகங்களில் இருந்து நடமாடும் இந்த வேனில் உணவு கொண்டு வரப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படும். 40 அம்மா உணவகங்களுக்கு மத்தியில் உள்ள மைய பகுதியில் இருந்து நடமாடும் உணவகத்துக்கு உணவு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறைந்த நேரத்தில் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து உணவு எடுத்து சப்ளை செய்யப்படும்.

இந்த திட்டத்தின் நோக்கம் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், மாற்றவர்களுக்கும் மலிவான விலையில் உணவு வழங்குவதே ஆகும்.

அடுத்த கட்டமாக விற்பனை குறைந்துள்ள 34 அம்மா உணவகங்களை விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவகங்கள் ஒவ்வொன்றும் மிக அருகாமையில் உள்ளதால் அதனை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர 70 அம்மா உணவகங்களில் ரூ.1000க்கும் குறைவாக விற்பனை நடக்கிறது. இதனை மூடாமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *