உள்ளாட்சி தேர்தல் பிரச்சனை- சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு!

Share on

சென்னை:தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரசுக்குள் தொடங்கிய உரசல் டெல்லி வரை எதிரொலித்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியான தி.மு.க. தங்களுக்கு கணிசமான இடங்களை ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரசார் தனித்து போட்டியிட்டார்கள். ஒரு சில இடங்களில் தனித்து களம் இறங்கினார்கள். தேர்தல் நேரத்தில் அதை பெரிதுபடுத்தாமல் இரு கட்சிகளும் தேர்தலை சந்திப்பதில் கவனம் செலுத்தின.

தேர்தலில் 132 ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் தனித்து போட்டியிட்டு வென்றவர்கள் 24 பேர்.

அதே போல் மாவட்ட பஞ்சாயத்து வார்டில் 15 பேர் வெற்றி பெற்றார்கள். அவர்களில் தனித்து போட்டியிட்டு வென்றவர்கள் 5 பேர்.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வந்தது.

அதில் யூனியன் தலைவர் பதவிகளில் 20 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தியது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ ஆகியோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வற்புறுத்தினார்கள்.

ஆனால் தி.மு.க. தரப்பில் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்கும் படி கூறி விட்டனர்.

இது காங்கிரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தி.மு.க. கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். அழகிரியின் ஆதங்கத்தை ப.சிதம்பரமும் நியாயப்படுத்தினார்.

இந்த மோதல் மறைமுகத் தேர்தலில் பகிரங்கமாக வெளிப்பட்டது. தி.மு.க. வெற்றி பெற வேண்டிய சில இடங்களில் காங்கிரஸ் காலை வாரியதால் தி.மு.க. தோல்வியை சந்திக்க நேரிட்டது.

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 3 யூனியன் தலைவர் பதவிகளை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி பலத்தில் 2 யூனியன் தலைவர் பதவிகளை கைப்பற்றியது.

அழகிரியின் அறிக்கை மற்றும் தேர்தலில் காங்கிரஸ் காலை வாரியது தி.மு.க. தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

யூனியன் தலைவராக வெற்றி பெற்ற காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்றார். அப்போது அவரிடம் “நான் கூட்டணி தர்மத்தை மீறவில்லை” என்பதை உங்கள் தலைவரிடம் எடுத்து சொல்லுங்கள் என்று நேரடியாகவே மு.க.ஸ்டாலின் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது.

அந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என்று காலையிலேயே தகவல் பரவியது. அதற்கு காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கூட்டணி உரசல்தான் என்றும் பேசப்பட்டது.

நேற்று காலையில் கே.எஸ்.அழகிரி அவசரமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அறிக்கை தி.மு.க. தரப்புக்கு திருப்தி அளிக்கவில்லை.

டெல்லி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என்பதை அறிந்ததும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் டெல்லியில் தங்கியிருந்த கே.எஸ்.அழகிரி மற்றும் கே.ஆர்.ராமசாமியை நேரில் அழைத்து கண்டித்தார்.

இந்த நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் சோனியாகாந்தியை சந்தித்தார். அப்போது தி.மு.க.வுடனான பிரச்சனை குறித்து விளக்கம் அளித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தை விளக்கி கூறினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *