கூத்துப்பட்டறையை உருவாக்கிய முத்துசாமி காலமானார்

சென்னை: கலையையும் கலைஞர்களையும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்ற கூத்துப்பட்டறை ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தஞ்சாவூர் அருகே உள்ள புஞ்சை எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர் ந.முத்துசாமி. நாடகக்கலையின் மீதும் நடிப்புக்கலையின் மீதும் தீராப்பசி கொண்ட ந.முத்துசாமி, கூத்துப்பட்டறை எனும் அமைப்பை தொடங்கினார்.

கலையில் நவீனங்களைப் புகுத்துவதும் நவீனங்களுக்குள் கலையைக் கொண்டு வந்து இணைப்பதும் என முத்துசாமி செய்த பணிகள், எல்லோரையும் வியக்கவைத்தன. மலைக்கச் செய்தன. இங்கே நடிப்புப் பயிற்சியைக் கற்றுக்கொண்டவர்கள், மிக அழகான, இயல்பான நடிப்பை வழங்குவதில் வல்லவர்கள் எனப் பேரெடுத்தவர்களாகியிருக்கிறார்கள்.

நடிகர் பசுபதி இங்கே பல வருடங்கள் நடிப்புப் பயிற்சி மேற்கொண்டார். பிறகு அவர் திரையில் நடிகராக வலம் வந்தார். அதிலும் குறிப்பாக, தனக்கென தனி பாணி என்றெல்லாம் அமைத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்துக்குத் தகுந்தது போல் நடித்து பேரெடுத்தார்.

அதேபோல், நடிகர் விமலும் கூத்துப்பட்டறையில் முத்துசாமியிடம் பயின்றவர்தான். இவரும் இயல்பான நடிப்பை வழங்குபவர் என்று பாராட்டுகளைப் பெற்றார். இப்போது உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் சேதுபதி, கூத்துப்பட்டறையில் அக்கவுண்டண்டாக வேலை பார்த்து, அப்படியே நடிப்புப் பயிற்சியையும் மேற்கொண்டார். அவரின் ஒவ்வொரு படங்களிலும் விஜய் சேதுபதி ஸ்கோர் செய்து வருவதற்குப் பின்னே கூத்துப்பட்டறையின் பயிற்சிப் பாசறையும் முத்துசாமியின் தேர்ந்த படிப்பினைகளும் இருப்பதை விஜய் சேதுபதியே சொல்லியிருக்கிறார்.

இன்னும் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று ஜொலித்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். இத்தகு சாதனைகளை சத்தமின்றி செய்து, கலைக்கு பெருமையும் புகழையும் சேர்த்து வந்த முத்துசாமி, பத்மஸ்ரீ முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறார். தெருக்கூத்து எனும் விஷயத்துக்கு, உயரிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்த மகா கலைஞன் என்று முத்துசாமியைக் கொண்டாடுகிறார்கள் கலைஞர்கள்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, இன்று காலமானார். முத்துசாமியின் மறைவு கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *