கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா – ‘பேபி மப்ளர் மேனு’க்கு சிறப்பு அழைப்பு!

Share on

புதுடெல்லி:டெல்லி சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கெஜ்ரிவால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர், முதல்-மந்திரி ஆவது, இது தொடர்ந்து 3-வது தடவை ஆகும். டெல்லி ராமலீலா மைதானத்தில் காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடக்கிறது.

கெஜ்ரிவாலுடன் எல்லா கேபினட் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். பதவி ஏற்பு விழாவில், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டார்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சியமைத்த பின்னர் மாநில சட்டசபை தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள கட்சிகள் வெற்றிப்பெற்றால் பதவி ஏற்பு விழாவில் பிற மாநில எதிர்க்கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோன்று டெல்லியில் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் தலைவர்கள், பிற மாநில முதல்- மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் பேசுகையில், “டெல்லியின் முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்பது டெல்லிக்கான குறிப்பிட்ட நிகழ்ச்சியாகும். இதில் கலந்துகொள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிற மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு இல்லை” என தெரிவித்தார்.

பதவி ஏற்பு விழாவில் டெல்லி மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என ஆம் ஆத்மியின் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, அவ்யன் தோமர் என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு கெஜ்ரிவால் வேடமிட்டு பெற்றோர்கள் ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் கெஜ்ரிவால் வரவில்லை. இதனால், குழந்தையின் பெற்றோர் அவரை சந்திக்க முடியாமல் வீடு திரும்பினர்.

கெஜ்ரிவால்போல தொப்பி, மப்ளர் அணிந்து, மீசை வரைந்து, சிறிய கண்ணாடி ஒன்றை அணிந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த அந்த குழந்தை பற்றிய வீடியோக்கள் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. குழந்தையை பலரும் கொஞ்சும் விதமாக கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்தநிலையில் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவிற்கு வருமாறு அந்த குழந்தைக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு பேபி மப்ளர் மேன் அழைக்கப்பட்டு உள்ளார்” என கூறப்பட்டு உள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *