முதியோருக்கு ரூ.3000 ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி

ஆந்திராவில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதியோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.மக்களவை தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் விவசாயிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மகளிர் என அனைத்து பிரிவினரையும் ஈர்க்கும் விதத்தில் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் திருப்பதியில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை அவர் அளித்து வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவித்த பல்வேறு திட்டங்களை அவர் காப்பி அடித்து அறிவித்து வருகிறார். நான் பாதயாத்திரை சென்றபோது மக்கள் தங்களது பிரச்சினைகளை கூறினர். வரும் தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான தேர்தலாகும். ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சி வெற்றுபெற சுமார் 56 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளனர். போலீஸாரின் துணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என சந்திரபாபு நாயுடு திட்டமிடுகிறார். அதனை முறியடிப்போம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், முதியோர் உதவித் தொகையை மாதம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்துவோம். விவசாயிகளுக்கு ஒவ்வொரு மே மாதமும் ரூ. 12,500 முதலீட்டு தொகையாக வழங்கப்படும். இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *