முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூரில் இன்று அளித்த பேட்டி ..

Share on

மு.க.ஸ்டாலின் விளம்பரத்திற்காக தவறான கருத்தை சொல்கிறார்- முதலமைச்சர் பழனிசாமி
மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையை பார்வையிட்ட காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட தவறான கருத்தை சொல்கிறார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து இன்று 3ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து கடைமடை வரை தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் அனைத்து ஏரி, குளங்களும் நிரப்பப்படும்.

ஏரி, குளங்களை தூர்வார ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. டெல்டா பகுதி கால்வாய்கள் எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய பாலாஜி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்.

கால்வாயில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே விட முடியும். தற்போது நாற்று தான் விட்டு வருகிறார்கள். பின்னர் விவசாயிகளின் தேவைக்கேற்ப படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும்.

விவசாயிகளுக்கு தேவையான நெல், விதை, உரம் தயாராக உள்ளது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணராஜாசாகர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் நாளை முதல் மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் அந்த உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.

நிலச்சரிவால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அது தவறான கருத்து. கன மழை பெய்ததும் அமைச்சர் உதயகுமார் அங்கு சென்று ஆய்வு செய்தார். துணை முதல்-அமைச்சரும் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இது குறித்து நாளை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

முக ஸ்டாலின்

நீலகிரியில் உயிர் இழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட தவறான கருத்தை சொல்கிறார். போர்க்கால அடிப்படையில் நீலகிரியில் அனைத்து பணிகளும் சீர் செய்யப்படும்.

தமிழகத்திற்கு தொழிற்சாலைகள் அதிக அளவில் வரவேண்டும். அதற்காக வெளிநாடு செல்கிறேன். மேலும் லண்டனுக்கும் சென்று ஆய்வு செய்து தமிழகத்தில் புதிய தொழில்நுட்ப முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ப.சிதம்பரம் பலமுறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தார். அவர் தமிழகத்திற்கு என்ன திட்டம் கொண்டு வந்தார். பூமிக்கு தான் அவர் பாரமாக உள்ளார். எந்த பிரச்சனையையும் அவர் தீர்க்கவில்லை. அவருக்கு சுயநலன் தான் முக்கியம். மக்கள் அவரை நிராகரித்துள்ளனர்.

நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். சேலத்திற்கு அடிக்கடி வருகிறேன். தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். மேலும் பல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *