ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்த மந்திரி வீட்டு திருமணம்!

Share on

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவுக்காக ரூ.500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஸ்ரீராமுலுவின் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக் கொண்டாட்டங்கள் பிப்ரவரி 27-ந் தேதியே தொடங்கிவிட்டன.

9 நாள் திருமண விழா பெங்களூரு அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது.

40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட முறையில் திருமண அரங்கு அமைக்கப்பட்டது. 27 ஏக்கர் விழா அரங்குக்காகவும் 15 ஏக்கர் பார்க்கிங்காகவும் ஒதுக்கப்பட்டன. நான்கு ஏக்கர் பரப்பளவில் அலங்கரிக்கப்பட்டுள்ள மணப்பந்தலில் ஹம்பியில் அமைந்துள்ள வீரபக்‌‌ஷர் ஆலய வடிவம் உட்பட பல அரங்குகள் அமைக்கப்பட்டன.

அரங்க அமைப்புக்காக சுமார் 300 பேர் மூன்று மாதங்களாகப் பணிபுரிந்தனர். மாண்டியாவில் உள்ள மெலுகோட்டை ஆலயத்தில் அமைந்துள்ளதைப்போல் மணமேடை உருவாக்கப்பட்டு இருந்தது. 200 மேடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு மேடையில் மலர்கள் அலங்கரிக்கப்பட்டன.

வரவேற்புக்காக பல்லாரி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அரங்கம், பாலிவுட் ஆர்ட் டைரக்டர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

இந்தி நடிகை தீபிகா படுகோனின் திருமண நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்த சானியா சர்தாரியா இந்தத் திருமண விழாவின் ஆடை வடிவமைப்பாளராகவும், முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமண நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஜெயராமன் பிள்ளை மற்றும் திலிப் ஆகியோர் இந்தத் திருமண நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்தனர்.

சுமார் 1,000 சமையல் கலைஞர்கள் இந்தத் திருமண நிகழ்ச்சிக்காக உணவு தயாரித்தனர். சுமார் 7,000 பேர் ஒரே வேளையில் அமர்ந்து உண்ணும் பந்தி அமைக்கப்பட்டது. இந்த திருமண விழா கர்நாடகாவையே ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *