சாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Share on

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

டெல்லி-குர்கான் சாலையில் பல்வேறு இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காலை நேரத்தில் சாலையில் வாகனங்கள் தேங்கின. டெல்லி-குர்கான் எல்லைப் பகுதி போக்குவரத்து நெரிசலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த விமான பணியாளர்கள் குழு, குர்கான் ஆம்பியன்ஸ் மால் அருகே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக, விஸ்தாரா விமான நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான சஞ்சீவ் கபூர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

விமானங்களை தவறவிட்டவர்களுக்கு அடுத்தடுத்த விமானங்களில் இடம் அளிக்கப்படும் எனவும் அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஏராளமான கார்கள் தேங்கி நிற்கும் வீடியோவை பயனாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை பார்த்திராத போக்குவரத்து நெரிசல் என மற்றொரு பதிவாளர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் பார்ப்பது வெறும் 10 சதவீதம்தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்கள் நகராமல் அப்படியே நிற்பதை சிலர் புகைப்படங்களாகவும் வெளியிட்டுள்ளனர். இதனிடையே, டெல்லி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாகனங்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்தின் வேகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *