ஆபத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம்: சவுரவ் கங்குலி கவலை

இந்திய கிரிக்கெட் ஆபத்தில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைவரும், வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவருமான சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ-க்கு கங்குலி எழுதியுள்ள கடிதத்தில் கிரிக்கெட் தொடர்பான பல்வேறு முன்னேற்றங்கள் குறித்து கங்குலி கவலை தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு எதிராக எழுப்பபட்டுள்ள பாலியல் புகார் பற்றியும், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாகிகள் குழுவுக்கள் பிரிவினை இருப்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியக் கிரிக்கெட் நிர்வாகம் எங்கு சென்று கொண்டிருகிறதோ என்ற ஆழமான அச்சத்துடன் இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன். நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். எங்கள் வாழ்க்கை வெற்றி மற்றும் தோல்விகளால் ஆளப்பட்டது. இந்திய கிரிக்கெட்டின் பிம்பம் எங்களுக்கு மிக மிக முக்கியம். ஆனால், கடந்த சில வருடங்களாக நடந்து வரும் விஷயங்களைப் பார்க்கும்போது, இந்திய கிரிக்கெட்டின் நிர்வாகம் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் எழுப்பப்பட்டுள்ள பாலியல் புகார்கள் எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது பிசிசிஐ-ன் பிம்பத்தை மோசமாக்கியுள்ளது. அந்த புகார் கையாளப்பட்ட விதம் இன்னமும் மோசம்.  நிர்வாகிகள் குழுவில் இருந்த நான்கு பேர் எண்ணிக்கை இப்போது இரண்டாகிவிட்டது. அந்த இருவரிடையேயும் கருத்து வேறுபாடு உள்ளது.

இதற்கு முன் இல்லாத வகையில், கிரிக்கெட் விதிகள் சீசனுக்கு நடுவில் மாற்றப்படுகின்றன. நிர்வாகிகள் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் பின்பற்றப்படாமல் அவமதிக்கப்படுகின்றன. பயிற்சியாளர் தேர்வில் எனக்கு மோசமான அனுபவம் கிடைத்தது. (அதைப் பற்றி அதிகம் பேசாமலிருப்பது நல்லது).

பெருவாரியான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் என்பது, பல வருடங்களாக, அற்புதமான நிர்வாகிகளாலும், உயர்ந்த கிரிக்கெட் வீரர்களாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. அவர்களால் ஆயிரக்கணக்கான ரசிகர்களை மைதானத்துக்கு வரவழைக்க முடிந்தது. இந்தத் தருணத்தில், அது ஆபத்தில் இருப்பதாக உணர்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் காதில் இது விழும் என நம்புகிறேன்” என்று கங்குலி தனது கடிதத்தை முடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *