2 வாரங்களாக நெல் கொள்முதல் செய்யாததால் குவியலாக கிடக்கும் அவலம்!

Share on

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 2 வாரங்களாக நெல் கொள்முதல் செய்யாததால் குவியல், குவியலாக குவிந்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, இதே நிலை நீடித்தால் தற்கொலை தான் முடிவு என ஆவேசமாக கூறினர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மதுக்கூர் சாலையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கடந்த 2 வாரங்களாக கொள்முதல் செய்யாமல் குவியல், குவியலாக வைக்கப்பட்டுள்ளது. இதே நிலைதான் பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ளது. இதை கண்டித்து விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயி பொன்னவராயன்கோட்டை வீரசேனன் கூறுகையில், விளைந்த நெல்லை அறுப்பதற்கு மிஷின் (கதிர் அறுவடை இயந்திரம்) இல்லை. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு வந்தாலும் அரசு அதை வாங்க தயாரில்லை. நாங்க கொண்டுவந்த நெல்லை டோக்கனை வாங்கிக்கொண்டு குவியல், குவியலாக போட்டு வைத்திருக்கிறோம். எப்போது எங்கள் நெல்லை கொள்முதல் செய்வார்கள்? என்று தெரியவில்லை. ஆனால் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாங்கள் நிறைய திறந்திருக்கிறோம் என்று சொல்கிறது.

ஆனால் அது முழுவதும் வெற்று அறிவிப்பு. விவசாயிகளை ஏமாற்றுகிற வேலை. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக விளைந்த நெல்லை அறுப்பதற்கு மிஷின் வழங்கவேண்டும். இதே நிலை நீடித்தால் அனைத்து விவசாயிகளும் நேரடியாக நெல்லை அள்ளி மூக்குல போட்டு அது நுரையீரலுக்கு போய் எல்லா விவசாயிகளும் நவீனமாக தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் என்று கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்…

தற்போது  தமிழக சட்டமன்றம் கூடியுள்ளது. உடனே உணவுத்துறை அமைச்சர், தஞ்சை  மாவட்டத்தில் இத்தனை கதிர் அறுவடை இயந்திரங்கள் இருக்கிறது. நேரடி நெல்  கொள்முதல் நிலையங்களில் இவ்வளவு நெல் விவசாயிகளிடம் இருந்து நாங்கள்  கொள்முதல் செய்திருக்கிறோம்.

30 ரூபாய் வாங்கியதற்காக நாங்கள் இத்தனை பேரை  கைது செய்திருக்கிறோம் என்று ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக உணவு அமைச்சர்  சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மொத்தத்தில் இந்த அரசு நெல்  கொள்முதல் நிலையங்களால்  விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்று  விவசாயி வீரசேனன் கூறினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *