ஏத்தன் ரக வாழை விலை வீழ்ச்சி..! நெல்லை விவசாயிகள் கவலை!!

Share on

நெல்லை சுற்றுவட்டாரத்தில் அதிக விளைச்சல் காரணமாக ஏத்தன் ரக வாழை விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். எனவே, அரசே ஏத்தன் ரக வாழைக்கு அடிப்படை விலை நிர்ணயிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வகையான வாழை பயிரிடப்பட்டாலும் பெரும்பாலான விவசாயிகள் ஏத்தன் ரகத்தை பயிர் செய்கின்றனர். நெல்லை சுற்றுவட்டார பகுதிகளான  நரசிங்கநல்லூர், கருங்காடு, அத்திமேடு உள்ளிட்ட இடங்களில் தற்போது ஏத்தன் ரக வாழைகள் குலை தள்ளியதால் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ரக வாழைகள் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருளாகவும், கேரளாவின் விருந்து உபசரிப்பில் முக்கிய பங்கு வகிப்பதாலும், மாவாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருளாகவும் திகழ்வதால் சந்தையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதுதவிர நெல்லை பகுதியில் சாகுபடி செய்யப்படும் ஏத்தன் வாழைகள் செழுமையான மண்வளம், சிறந்த நீராதாரம் உள்ளிட்ட காரணங்களால் மிகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும், சுவையானதாகவும் விளங்குவதால் ஏத்தன் ரக வாழைக்கு கேரளாவில் அதிக மவுசு உண்டு. ஏத்தன் ரக வாழையை விவசாயிகள் நடவு செய்து மண் அணைத்து உரமிட்டு கம்புகள் நட்டு வாழை ஒன்றுக்கு ரூ.120 வரை செலவு செய்திருந்தனர். அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏத்தன் ரக காய்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் எடை குறைவாகவும், குறைவான எண்ணிக்கை கொண்ட சீப்புகளுடன் விளைச்சல் அடைந்துள்ளன. இது தவிர ஹைபிரிட் ரக ஏத்தன் காய் இறக்குமதி, அதிக இடங்களில் சாகுபடி, கேரள மாநிலத்திலும் விளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் ஏத்தன் ரக வாழை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நரசிங்கநல்லூர் பகுதியில் கிலோவுக்கு ரூ.40க்கு மேல் விலையிருந்த ஏத்தன் வாழை, தற்போது ரூ.28க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர் செய்ய வாங்கிய கடனை எவ்வாறு திரும்ப செலுத்துவது என செய்வதறியாது விவசாயிகள் திகைத்து வருகின்றனர். எனவே அரசு தனிக்கவனம் செலுத்தி விவசாயிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வாழைக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

சின்டிகேட் அமைத்து கொள்முதல்,
விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, உரங்கள், தளவாட பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் கடும் சிரமத்திற்கிடையே விவசாய பணியை மேற்கொண்டு வருவாயை எடுத்து விடலாம் என்று விவசாயிகள் எண்ணினாலும் வியாபாரிகள், புரோக்கர்கள் கூட்டாக சின்டிகேட் அமைத்து குறைந்த அளவு விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். பயிர் காப்பீடு திட்டங்கள் வெறும் கண்துடைப்பு திட்டங்களாகவே உள்ளது. இந்த அவலநிலை மாற அரசு வாழைக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர் காப்பீட்டுக்கு உரிய இழப்பீடு தொய்வின்றி கிடைக்க வழி வகை செய்திட வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதப்படுத்தும் தொழிற்சாலை,
உற்பத்தியாகும் வாழையை சந்தைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கலை தவிர்த்திடும் விதத்திலும், உரிய நிர்ணய தொகை கிடைத்திட ஏதுவாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுத்தமல்லி விலக்கில் வேளாண் துறைக்கு பாத்தியப்பட்ட சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் வாழை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க முன்வருவதுடன், மாவு பொருட்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சந்தைப்படுத்திட நவீன யுக்திகளை கை யாள்வதும் அவசியம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *