29 மார்ச் 2024
பழைய பென்சன் திட்டத்துக்கு வாய்ப்பே இல்லை.. கை விரித்த மத்திய அரசு!

பழைய பென்சன் திட்டத்துக்கு வாய்ப்பே இல்லை.. கை விரித்த மத்திய அரசு!

பென்சன் நிதியை திருப்பித்தர சட்டத்தில் இடமில்லை என மத்திய இணையமைச்சர் தகவல்.

பழைய பென்சன் திட்டத்துக்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மத்திய அரசு புதிய விளக்கம் கொடுத்துள்ளது.

ஐந்து மாநிலங்கள் கோரிக்கை!

பாஜக ஆட்சி இல்லாத ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் ஆகிய மாநில அரசுகள், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) செயல்படுத்த திட்டுமிட்டுள்ளன. இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பென்சன் நிதியில் உள்ள மாநில அரசின் பங்களிப்புகளை திருப்பித் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய அரசு விளக்கம்!

பழைய பென்சன் திட்டம் தொடர்பான கேள்வி மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் பகவத் காரத் எழுத்து மூலம் அளித்த பதிலில், “தேசிய பென்சன் திட்டம் கடந்த 2003ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பென்சன் நிதியம் ஏற்படுத்தப்பட்டு நிதி தொகுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய பென்சன் திட்டத்துக்குத் திரும்ப நினைக்கும் 5 மாநிலங்கள் மாநிலத்தின் பங்கை திரும்ப அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளன. ஆனால் பென்சன் நிதி ஒழுங்கமைப்பு மற்றும் மேம்பாட்டு ஆணைய (பிஎஃப்ஆர்டிஏ) சட்டம், 2013ன் கீழ் மாநிலங்களுக்கு பென்சன் நிதியைத் திருப்பித் தருவதற்கு இடமில்லை. மேலும் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் எந்தப் பரிசீலனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

​பூகம்பமாக வெடிக்கும் போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில பாஜக அல்லாத மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திவிட்டன.

​ரகுராம் ராஜன் கருத்து!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பழைய பென்சன் திட்டம் குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளதோடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடங்குவது நீண்ட காலத்திற்கு பெரும் சுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார். அரசு ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குறைந்த செலவில் வழிகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். ரகுராம் ராஜன் இதுபற்றிக் கூறுகையில், பழைய ஓய்வூதியத் திட்ட நடைமுறையில் தற்போதுள்ள சம்பளத்துடன் ஓய்வூதியம் இணைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் பெரும் செலவினம் ஏற்படும் என்று அவர் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

​பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?​

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். இது பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்நாள் சேவை முடியும் வரை மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது. இதன்படி, மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஒருவர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதிக்கு சமம்.

​புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது சமீபத்திய ஓய்வூதியத் திட்டமாகும். இதில் பயனாளிகள் ஓய்வூதியத்திற்குப் பிறகு முதலீடு செய்யப்பட்ட தொகையில் 60 சதவீதத்தை திரும்பப் பெற முடியும். முதியோர் வருமான பாதுகாப்பை நிதி ரீதியாக நிலையான முறையில் வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய முறைக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துடன் 2003 டிசம்பர் மாதத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

​புதிய பென்சன் திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்?

2004 ஜனவரி 1 முதல் அரசுப் பணியில் (ஆயுதப் படைகளைத் தவிர) புதிதாக ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் 2009 மே 1 முதல் அனைத்து குடிமக்களுக்கும் தன்னார்வ அடிப்படையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதேசமயம் தேசிய பென்சன் திட்டத்தில் அரசு மற்றும் ஊழியர்களால் பங்களிப்பு செய்யப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஊழியர்கள் தேசிய பென்சன் திட்டத்தை எதிர்க்கின்றனர்.