தமிழகத்திலும் உயிர்ப்பலி ஏற்பட வேண்டுமென திமுக எதிர்பார்க்கிறது- பொன்.ராதாகிருஷ்ணன் !

Share on

தூத்துக்குடி:நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டங்களால் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து சென்னையில் கோட்டையை நோக்கியும், மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் பா.ஜனதாவினர் பேரணியாக சென்று மனு அளிக்க முடிவு செய்தனர். அதற்கான பேரணி தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடியில் பா.ஜனதாவினர் வி.வி.டி. சிக்னலில் இருந்து 100 அடி தூரம் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளிக்க சென்றனர். முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் டெல்லி கலவரம் போல ஒரு கலவரம் நடந்தது கிடையாது. தமிழகத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மக்களை பிளவுப்படுத்த பார்க்கிறது. தி.மு.க.வினர் பகல்வேசம் போடுகின்றனர். தி.மு.க.வில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக கூறி ஏமாற்ற பார்க்கின்றனர்.

டெல்லி கலவரத்தால் அங்கு உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் போராட்டங்கள் நடக்கும் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் உயிர் பலிகள் ஏற்பட வேண்டும் என தி.மு.க.வினர் எதிர்பார்க்கின்றனர். தங்கத்தை பட்டை தீட்ட தீட்ட தான் அது பளபளக்கும். அதேபோல் தி.மு.க. எதிர்க்க எதிர்க்க பா.ஜ.க. ஆட்சியை நோக்கி செல்லும். இது பூ பாதை அல்ல. இந்த முள் பாதையில் நாம் கவனமுடன் செல்ல வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று நாம் எடுத்துரைக்க வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சட்டம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக போராடும் தீய சக்திகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *