தமிழக சட்டசபை கூட்டத்தொடரை தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன !

Share on

சென்னை:தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந்தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

ஆனாலும் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடியது. இந்த கூட்டத் தொடரை இன்று முதல் புறக்கணிப்பதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தை தி.மு.க. கொறடா சக்கரபாணி, சபாநாயகரிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் காஞ்சீபுரத்தில் ஒருவருக்கு இருப்பதாக முதன் முதலில் 9.3.2020 அன்று கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 9 பேருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதா ரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

12 நாளில் 9 பேருக்கு கொரோனா நோய் என்பதும், 8950 பேருக்கு மேல் தனிமைப்படுத்துப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற செய்தியும் “நோயை எதிர்கொள்ள” நமக்கு கிடைக்கும் “கோல்டன் அவர்ஸ்” களை வீணடிக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மத்திய அரசு பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் பி மற்றும் சி ஊழியர்கள் 50 சதவீதம் பணிக்கு வந்தால் போதும் என்றும் இந்த நடைமுறை ஏப்ரல் 4-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நேற்றைய தினம் தமிழ்நாட் டிலும் அது நீட்டிக்கப்பட்டு இன்று அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு அமலில் இருந்துள்ளது.

நேற்றைய தினம் மாநில தலைமைச் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை செயலாளர் “கொரோனா நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் ரிப்போர்ட் ஆன 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, “அந்த மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவைகளை மட்டும் அனுமதிக்குமாறு” மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

“தனிமைப்படுத்துவது” மட்டுமே கொரோனா நோய் தடுப்பிற்கு இன்றியமையாத ஒரே மருந்து என்று உலகம் முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது நாமே சட்டமன்றத்தில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக் கொண்டிருப்பது மக்களின் பாதுகாப்பிற்கு உகந்ததாகத் தெரியவில்லை.

நோய் வரும் முன்பே “தனிமைப்படுத்திக்” கொள்ளாத “இத்தாலி” நாட்டின் பாதிப்பையும், “நோய் குறித்து” முன்கூட்டியே நோய் அறிகுறி குறித்த தகவல் கிடைத்தும் தயாராகாமல் அலட்சியம் செய்த சீனாவின் பாதிப்பையும் நமது மாநில அரசு உணரத் தவறியிருப்பது வருத்தமளிக்கிறது.

பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் “தனிமைப்படுத்திக் கொள்வோம்” என்று அரசு அறிவித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிராகவே கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

ஆகவே மக்களின் பாதுகாப்பு கருதியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அச்சத்தில் வாழும் மக்களின் பக்கத்தில் தொகுதியில் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும், தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை இன்று (திங்கட்கிழமை) முதல் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

“முன்எச்சரிக்கை நடவடிக்கை” மற்றும் “வரும் முன் காப்போம் நடவடிக்கை” ஆகியவற்றில் அரசின் கவனத்தை மேலும் ஈர்க்க தி.மு.க.வின் இந்த சட்டமன்ற “கூட்டத் தொடர் புறக்கணிப்பு” உதவிடும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் தி.மு.க. கொறடா சக்கரபாணி நிபுணர்களிடம் கூறுகையில், ‘‘இன்று முதல் சட்டசபை கூட்டத்தொடர் முழுவதையும் நாங்கள் புறக் கணிக்கிறோம். இந்த அரசு சட்டசபையை தொடர்ந்து நடத்துவது என வைராக்கியத்தில் உள்ளது. அதனால் இந்த தொடரை தி.மு.க புறக்கணிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது’’ என்றார்.

பேட்டின்போது எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ரங்கநாதன், இ.கருணாநிதி, ஆர்.டி.சேகர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.

இதேபோல் காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளும் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தன.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா நோயை தடுக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடுகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்து கிறார்கள் இதை தள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை வற்புறுத்தியும் அரசு ஏற்க வில்லை.எனவே நாங்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் கூறியதாவது:-

சட்டமன்ற கூட்டத் தொடரை தி.முக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் முஸ்லிம் லீக்கும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சியினரும் பலமுறை வற்புறுத்தியும் சட்டமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைக்கவில்லை. எனவே மக்கள் நலன் கருதி முஸ்லிம் லீக் கட்சியும் இந்த கூட்டத்தொடரை புறக் கணிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து தி.மு.க, காங்கிரஸ், முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற வளாகத்தை விட்டு வெளியே சென்றனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *