திருச்சியை பொறுத்தவரை வைகோ வருவதை திமுகவினர் ரசிக்கவில்லை – வைகோ ஆவேசம்

இந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட்டு? எங்கெங்கே? என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இது எங்களுக்கு அது உங்களுக்கு என்கிற ரீதியில் அந்தந்த கட்சியினர் பேசிக்கொண்டு வருகின்றனர். அப்படியாக திருச்சி லோக்சபா தொகுதி எங்களுக்கு தான்  பொதுச்செயலாளர் வேலை பார்க்க சொல்லி விட்டார் என பேச ஆரம்பித்திருக்கின்றனர் மதிமுகவினர். திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக 5ல் ஆரம்பித்து பேசி வருகிறது. மதிமுக எத்தனை கேட்டாலும் அவர்களுக்கு கிடைப்பது 2 அல்லது 1 என்பது தான் உண்மை என்கின்றனர் திமுகவினர்.

வைகோவை பொறுத்தவரை இந்த லோக்சபா தேர்தலில் தனக்கு மட்டுமல்லாது கணேசமூர்த்தி மற்றும் மல்லை சத்யா ஆகியோருக்கு எப்படியும் சீட் வாங்கித் தந்து விட வேண்டும் என நினைப்பதாக மதிமுகவினர் கூறுகின்றனர். ஒரு வேளை 2 என்றால் தனக்கும் கணேசமூர்த்திக்குமாவது வாங்கி விடவேண்டும் என்பது அவரது எண்ணம். அந்த வகையில் திருச்சி எப்படி இருக்கும் என தனது நிர்வாகிகளிடம் வைகோ கேட்டிருக்கிறார். ஏற்கனவே எல்.கணேசன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும் வெளியூரில் இருந்து வந்தவர்களான ரங்கராஜன் குமாரமங்கலம், தலித்எழில்மலை, எல்.கணேசன் என பலரும் வெற்றி பெற்றிருப்பதால் வைகோவும் திருச்சி தனக்கு எளிதாக இருக்கும் என்று கருதுவதாக கூறப்படுகிறது.

வைகோ இப்படி நினைக்க திருச்சி திமுகவினரோ தொகுதி கூட்டணி கட்சிக்கு போனாலும் பரவாயில்லை திருச்சிகாரர் தான் போட்டியிட வேண்டும் என்றே கருதுவதாக  தெரிகிறது. அப்படி பார்த்தால் மதிமுகவிற்கு சரியான ஆள் இல்லை என்பதால் காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிக்கு தொகுதியை கொடுங்கள் என மேலிடத்தை கேட்டுக் கொண்டுள்ளனர். திருச்சியை பொறுத்தவரை வைகோ வருவதை திமுகவினர் ரசிக்கவில்லை என்பதே தற்போதைய நிலை.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *