தமிழ்நாட்டில் 3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த வேண்டும்- தினகரன் அறிக்கை !

Share on

சென்னை:அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகளவில் வரலாறு காணாத அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க இந்தியாவும் போராடி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் எந்தளவுக்கு முழு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதற்கு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட சுய ஊரடங்கே சாட்சியாகும். எனினும், பிரதமர் கூறியிருப்பதை போல இது மிகப்பெரிய போராட்டத்தின் தொடக்கம் தான்.

‘குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என வல்லுனர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதனால்தான் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தில் மட்டும் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசு அறிவித்திருப்பது மாணவர்களின் உயிரோடு விளையாடும் பொறுப்பற்ற செயலாகும். எனவே, எத்தனை தேர்வுகள் மீதம் இருந்தாலும் அவற்றை ஒத்திவைக்க வேண்டும்.

மத்திய அரசு தலையிட்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 3 மாவட்டங்களை முடக்கி வைத்திருக்கும் நிலையில், இதற்குப் பிறகும் அரசு நிலைமையின் தீவிரத்தை உணராமல் செயல்படுவது சரியானதல்ல.

மக்களுக்கு சூழலை விளக்கி குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்துவதே சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையும். அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாதவாறு உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

மேலும் கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டிருப்பது போல அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும். டெல்லியில் செய்திருப்பதைப் போன்று தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அறிவிக்கப்பட வேண்டும்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *