TTV Dhinakaran

ஊடகங்களை விளாசிய டிடிவி தினகரன்

சென்னை: மதுரையில் தான் தங்கியிருந்த தனியார் ஓட்டலில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்கியதை வைத்து ரகசிய உடன்பாடா என விவாதம் நடத்துவதெல்லாம் தேவையா என கேள்வி எழுப்பியிருக்கிறார் அமமுக தலைவர் டிடிவி தினகரன்.

முன்னதாக நேற்று அதிமுகவின் நமது அம்மா செய்தித்தாளில் டிடிவி – ஸ்டாலின் ரகசிய சந்திப்பு. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே மேல்முறையீடு செல்வதில்லை என முடிவு செய்யப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து ஊடகங்களில் வாத விவாதங்கள் எழுந்த நிலையில் இதனைக் கண்டித்துள்ளார் டிடிவி தினகரன்.

“நான் மதுரை சென்றால் எப்போதுமே அந்த தனியார் ஓட்டலில்தான் தங்குகிறேன். நான் தங்கியிருந்த அதே நாளில் ஜி.கே.வாசனும்கூட அந்த ஓட்டலில்தான் தங்கியிருந்தார். ஸ்டாலின் அங்கு தங்கியிருப்பது எனக்கு இரவுக்கு மேல்தான் தெரிந்தது. ஒரே ஓட்டலில் தங்கியிருந்ததால் ரகசிய சந்திப்பு என்று கூறுவதெல்லாம் நியாயமா? இதை வைத்து எல்லாம் விவாதம் தேவையா? ரஃபேல் போர் விமான சர்ச்சை குறித்து விவாதித்திருந்தால் நான் வரவேற்றிருப்பேன்.

நான் தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தாலே போதும் நான் யாரை சந்தித்தேன் என்பது தெரிந்துவிடும். அதைவிடுத்து இதை விவாதிக்கிறார்கள். சரி, நான் அண்மையில் திருவண்ணாமலையில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன். அன்று வேறு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த தமிழக பாஜக தலைவரும் அதே ஓட்டலில் தங்கினார். அதனால், அன்று நாங்கள் ரகசிய சந்திப்பு நடத்தினோம் என்பீர்களா?

இப்போது இருக்கும் நிலையில் அதிமுக 20 தொகுதிகளிலும் டெபாசிட்கூட வாங்காது. அதனால், இப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள்” என்றார்.

மேலும், பேனர் கிழிப்பு விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றார். பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழித்தது தொடர்பாக டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது கமுதி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பேனர் கிழிப்பு தொடர்பாக அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *