பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார சீர்கேடு – மன்மோகன்சிங்

டெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வடுக்களை கண்கூடாக பார்க்க முடிகிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவத்துள்ளார். மேலும் பணமதிப்பிழப்பு ஜாதி, மத, இன, வயது, வேலைவாய்ப்பு என்ற பாகுபாடு இன்றி ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளர்.

புதுடெல்லி:  பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் “தவறான சிந்தனையின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு இந்திய பொருளாரத்திற்கு அழிவை தந்துள்ளது. நரேந்திர மோடி அரசு இனியும் இது போன்ற மரபுவழியில்லாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம்” என்றுஅறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் தலைஎழுத்தையே மாற்றிய  பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ம் ஆண்டான இன்று, இந்திய பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய அழிவுகளையும் அதன் வடுக்களையும் இன்று நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது என்றும் மன்மோகன்சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகள் என்னவென்று இன்னும் நாம் நிறைய புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் வேண்டியுள்ளது. பலவீனமான ரூபாய் மதிப்பு, சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் எண்ணெய் விலை, நடுத்தர பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவையும் தற்போது பூதாகரமாகத் தொடங்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது ஒவ்வொரு மனிதனையும் வயது, பாலினம், மதம், வேலைவாய்ப்பு என்று பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் பாதித்துள்ளது. காலம் தான் இதற்கு மருந்து என்று சாதாரணமாக சொல்லப்படுகிறது.

ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட காயங்களும் வடுக்களும் தெள்ளத்தெளிவாக தெரியத் தொடங்கியுள்ளன. ஜிடிபி வளர்ச்சி விகிதங்களில் வீழ்ச்சி என்பதைத் தாண்டி நோட்டுகள் தடைசெய்யப்பட்டதற்கான ஆழமான பாதிப்புகள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான அம்சங்களான சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் இன்னும் பணமதிப்பிழப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன.

பணமதிப்பிழப்பு வேலைவாய்ப்பில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, பொருளாதாரம் தொடர்ந்து முன்னேற்றம் காண போராடிக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. பணத்தட்டுப்பாட்டால் நிதி சந்தைகள் நெருக்கடியை சந்தித்துள்ளன, வங்கி சாரா நிதி அமைப்புகள் மற்றும் கட்டமைப்பு துறையினரும் மீண்டெழ முடியாமல் இருக்கின்றனர்.

மரபு வழியில்லாத வழக்கத்தையும், குறுகிய கால பொருளாதார நடவடிக்கைகளையோ இனியும் எடுக்க வேண்டாம் என்று மோடி அரசுக்கு மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார். இது மேலும் பொருளாதாரம் மற்றும் நிதி சந்தையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். எப்படி ஒரு நாட்டின் தவறான பொருளாதார கொள்கை தேசத்திற்கு நீண்ட கால அழிவை ஏற்படுத்தும் என்பதை இன்றைய தினம் நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். பொருளாதார கொள்கைகளை வகுப்பதற்கு முன்னர் அதிக அக்கறையும், கவனமும் தேவை என்பதையும் புரியவைத்திருப்பதாக மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *