வடமாநிலங்களில் விமர்சையாக நடந்த தசராக் கொண்டாட்டம்…!

Share on

வடமாநிலங்களில் விஜயதசமி மற்றும் தசரா பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

டெல்லியின் நவஸ்ரீ தார்மிக் லீலா கமிட்டி மைதானத்தில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

சண்டிகரில் 221 அடி உயரம் கொண்ட ராவணன் பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது. ராவண உருவத்தை தீயிட்டுக் கொளுத்திய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

போபாலில் தசராவை முன்னிட்டு ராவணனின் உருவ பொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ராவணன் தகன நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து ரசித்தனர்.

இதே போன்று உத்தரப்பிரதேசத்தின் லக்னோ,வாரணாசி உள்ளிட்ட நகரங்களிலும் ராவணன் உருவத்திற்கு தீவைத்து எரிக்கப்பட்டது. அப்போது இரவைப் பகலாக்கும் வகையில் வாண வேடிக்கைகள் நடைபெற்றன. தசராவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்கா மற்றும் மல்லேஸ்வரர் சாமி சிலைகள் கிருஷ்ணா நதியில் வாத்து வடிவிலான படகு மூலம் உல்லாச சவாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரைகளில் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, விஜயதசமி சுபிட்ச நாள் என்பதனால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்க நகைக்கடைகளில் திரண்டனர்.

தசரா மற்றும் விஜயதசமியையொட்டி, நாடாளுமன்ற வளாகம், குடியரசுத் தலைவர் மாளிகை, மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த் பிளாக், சவுத்பிளாக் கட்டடங்கள் வண்ண விளக்குளால் ஜொலித்தன.

டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் ஏராளமானோர் குடும்பத்துடன் விஜயதசமியைக் கொண்டாட திரண்டனர். அங்கு கண்களுக்கு விருந்தாக வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அக்சர்தாம் கோவிலில் வண்ண விளக்குகளின் அலங்காரம் கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

செய்தியாளர், அப்துல் சலாம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *