மரம் கடத்தல், குற்றச்சம்பவங்களை தடுக்க வனத்துறை சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தம்!

Share on

வனப்பகுதியில் குற்றச்சம்பவம், மரம் கடத்தலை தடுக்கவும் வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடந்து வருகின்றன. தமிழகத்தில் சமீப காலமாக வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. என்னதான் வனத்துறை அதிகாரிகள் ேசாதனைச்சாவடிகளில் வாகனங்களை சோதனை செய்தாலும், ஏதாவது ஒரு வகையில் மரம் கடத்தல் பரவலாக நடந்து வருகிறது.

மரம் கடத்தல் ஒருபுறம் இருந்தாலும், வனப்பகுதிகளில் குற்றச்சம்பவங்களும் நடந்து வருகின்றன. வனப்பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வனத்துறை முடிவு செய்து அமல் படுத்தி வருகிறது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் மூலம் ஏற்காட்டிற்கு மேலே வரும் வாகனங்கள், கீழே வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் அயோத்தியாப்பட்டணம் சோதனைச்சாவடி, கல்ராயன் மலை சோதனைச்சாவடி உள்பட மாவட்ட முழுவதும் வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து சேலம் வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமாக ஏராளமான சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்்த சோதனைகளில் அந்த வழியாக வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. இங்கு ஷிப்ட் முறையில் எப்போதும் இரு வனத்துறை ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். வனம், மலைப்பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க, தமிழகம் முழுவதும் வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு சோதனைச்சாவடிகளிலும் 2 அல்லது 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் வனம், மலைப்பகுதிகளில் ஏற்படும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்கலாம். இதனால் வனப்பகுதியில் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் குறைக்க முடியும். இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *