ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பு வாபஸ் – மத்திய அரசு அதிரடி முடிவு!

Share on

நமது நாட்டில் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படுகிற சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த பாதுகாப்பை பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் அதிரடியாக அவர்களது சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப்பெற்றது.

அவர்களுக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பிரதமருக்கும், அவருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியிருக்கிற குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கவும், முன்னாள் பிரதமர்களை பொறுத்தமட்டில் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே அவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும் வகை செய்து மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

அந்த திருத்தம், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறி விட்டது.

இப்போது மத்திய அரசு மற்றொரு அதிரடி முடிவு எடுத்துள்ளது.

அதாவது, நமது நாட்டில் உயிருக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ள 13 முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ் பிரிவின்கீழ் வழங்கி வந்த தேசிய பாதுகாப்பு படை (கருப்பு பூனை படை கமாண்டோக்கள்) பாதுகாப்பை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. இதை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பாதுகாப்பை பெறுகிற முக்கிய தலைவர்கள் பட்டியலில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இடம் பெறுகிறார்கள்.

இவர்களுடன் முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, முலாயம் சிங் (உத்தரபிரதேசம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்), பரூக் அப்துல்லா (காஷ்மீர்), அசாம் முதல்-மந்திரி சர்பானந்த சோனாவால், முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி உள்ளிட்டோரும் கருப்பு பூனை பாதுகாப்பு பெற்று வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் 2 டஜன் கருப்பு பூனை படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

மத்திய அரசு முடிவால் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 13 தலைவர்கள் அதிநவீன துப்பாக்கிகளுடனான கருப்பு பூனை படை பாதுகாப்பை இழக்கிறார்கள்.

இந்த தலைவர்களுக்கு இனி துணை ராணுவமான சி.ஆர்.பி.எப். (மத்திய ரிசர்வ் போலீஸ் படை), சி.ஐ.எஸ்.எப். (மத்திய தொழிற்பாதுகாப்பு படை) பாதுகாப்பு வழங்கப்படும்.

கருப்பு பூனை படை கமாண்டோக்கள், அவர்களின் அசல் பணியான பயங்கரவாத தடுப்பு, கடத்தல் தடுப்பு பணிகளுக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள். இதற்காகத்தான் தலைவர்கள் பாதுகாப்பில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று மற்றொரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.

அந்த வகையில் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த 450 கருப்பு பூனை படை கமாண்டோக்கள், அந்த பணியில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *