இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் – டிரம்ப் திடீர் அறிவிப்பு!

Share on

இந்தியா செல்லும்போது மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அகமதாபாத்தில் சுமார் ஒரு கோடி பேர் வரை திரண்டு தன்னை வரவேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் வரும் 24, 25ஆம் தேதிகளில் அகமதாபாத், ஆக்ரா, டெல்லி நகங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். வரும் 24ஆம் தேதி, அகமதாபாத்தில் 22 கிலோமீட்டர் தூரம் சாலை வழியே பயணித்து, அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்திற்கு செல்ல உள்ளனர். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என வர்ணிக்கப்படும் அங்கு, “வணக்கம் டிரம்ப்” என்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், லாஸ் வேகாஸ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப், தாங்கள் இந்தியா செல்ல உள்ளதாகவும், அங்கு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் என்றும் குறிப்பிட்டார். அதேசமயம், சிறந்த ஒப்பந்தமாக அமையவில்லை எனில், அது மேலும் தாமதம் ஆகலாம் என்றும், அதிபர் தேர்தலுக்குப் பிறகு ஒப்பந்தம் எட்டப்படலாம் என்றும் டிரம்ப் கூறினார். எனவே ஒப்பந்தம் எட்டப்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்திருந்த டிரம்ப், அமெரிக்காவுக்கே முதன்மை என்ற கொள்கையை பின்பற்றுவதால் அதற்கேற்ற ஒப்பந்தமாக இருந்தால் மட்டுமே கையெழுத்திடுவோம் என விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து கொலராடோ மாநிலம், கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில் பேரணி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப், அடுத்த வாரத்தில் தான் இந்தியா செல்லும்போது, அகமதாபாத்தில் தன்னை சுமார் ஒரு கோடி பேர் வரை வரவேற்க உள்ளதாகக் குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு செல்லும் வழியில், 60 லட்சம் பேர் முதல் ஒரு கோடி பேர் வரை திரள உள்ளதாக அவர் கூறினார். சுமார் ஒரு கோடி பேர் வரவேற்க உள்ளதாக பிரதமர் மோடி தன்னிடம் தெரிவித்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.  

இதனிடையே, குஜராத்தின் மிகப்பெரிய நகரான அகமதாபாத்தின் மொத்த மக்கள் தொகை 70 லட்சம் முதல் 80 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு கோடி பேர் வருவார்கள் என்று டிரம்ப் கூறினாலும் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் 22 கிலோமீட்டர் தூரம் சாலை வழியே பயணித்து செல்லும்போது சுமார் ஒரு லட்சம் பேர் வரை மட்டுமே திரண்டு வரவேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறவுள்ள அகமதாபாத் மொதிரா மைதானத்தில் அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.  மைதானத்தை சுற்றிலும், மைதானத்தின் உள்ளேயும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்ட அவர்கள், அங்கிருந்த அதிகாரிகளிடமும் விவரம் கேட்டறிந்தனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *