திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

சர்கார் படத்தின் கதை கரு தன்னுடையது எனவும் செங்கோல் படத்துக்காக தான் பதிவு செய்திருந்த கதையைத்தான் சர்காராக இயக்குநர் முருகதாஸ் படமாக்கியுள்ளதாகவும், இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

முன்னதாக கதை தொடர்பாகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் தொடுத்திருந்தார். இந்தப் புகாரை ஆய்வு செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ் சர்கார் – செங்கோல் கதைகளை ஆய்வு செய்து இரு கதைகளின் மையக் கருவும் ஒன்றுதான் எனக் கூறினார். தொடர்ந்து இணை இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் கருத்தும் தெரிவித்தார். இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தில் கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டது.  சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயரும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சமரசத்தால் சர்கார் திட்டமிட்டபடி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். தலைவர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாக தனியார் தொலைக்காட்சிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தான் எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கதை சர்ச்சையின்போது `சர்கார் படம் செங்கோல் கதையின் தழுவல்தான்’ எனப் பேட்டி கொடுத்திருந்தார்.

இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. “சர்கார் கதை பிரச்னையில், சம்பந்தப்பட்ட உறுப்பினர் புகாரில் உண்மை இருந்தது எனத் தெரிந்ததால் நடவடிக்கை எடுத்தேன். இந்த விவகாரத்தின்போது தேவையில்லாத அசௌகரியங்கள் ஏற்பட்டது” எனக் கூறி ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *