தடையை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,372 பேர் கைது!

சென்னை: தீபாவளி தினத்தில் அரசின் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,372 பேர் கைது செய்யப்பட்டனர்.

காற்று மாசு காரணமாக தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் பட்டாசுகளை வெடிக்கலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி, நாடு முழுவதுமே தீபாவளியன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என மாநில அரசு அறிவித்திருந்தது.தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 (அரசின் உத்தரவுக்கு கீழ்படியாமை), 285 (தீப்பற்றக்கூடிய, எரியக்கூடிய பொருட்களை மனிதர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தச் சட்டப் பிரிவுகளின்படி ஒரு மாதம் முதல் 6 மாதம் வரை சிறை தண்டனையோ ரூ.200 முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதமோ விதிக்கப்படலாம். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்று தமிழக காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தீபாவளி தினத்தில் அரசின் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 343 பேர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்தபடியாக கோவையில் 184, விழுப்புரம் 160, திருப்பூர் 152, நெல்லை 137, மதுரை 92, விருதுநகர் 135, திண்டுக்கல் 38, சிவகங்கை 66, ராமநாதபுரம் 34, தேனி 5, சேலம் 104, திருவள்ளூர் 97, காஞ்சிபுரம் 63, திருவண்ணாமலை 93, வேலூர் 50, நாமக்கல் 46, ஈரோடு 14, தருமபுரி 25, கிருஷ்ணகிரி 34, திருச்சி 64, கரூர் 11, பெரம்பலூர் 11, அரியலூர் 12, புதுக்கோட்டை 16, தஞ்சாவூர் 18, திருவாரூர் 31, நாகை 27, தூத்துக்குடி 31, கடலூரில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 6 சிறுவர்களின் தந்தைகள்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில்தான் முதலாவதாக 13 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. தீபாவளி தினத்தில் அரசின் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம்முழுவதும் மொத்தம் 2,176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 2,372 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும்சொந்த ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *