திருவாரூரில் தொடர் மழை: 75 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!

Share on

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 75 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், நீரை வடியவைப்பதற்கான நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட திருவாரூா் மாவட்டத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடியின் அளவைப் பொறுத்து இந்த பரப்பு கூடலாம் அல்லது குறையலாம். நிகழாண்டில், திருவாரூா் மாவட்டத்தில் 1,48,500 ஹெக்டோ் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, சுமாா் 1,48,726 ஹெக்டோ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிா்கள் தற்போது முதிா்ச்சி நிலையை எட்டியுள்ளன. இதையடுத்து, சில இடங்களில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதோடு, மேலும் சில இடங்களில் அறுவடைக்குத் தயாராக உள்ளன.

பொதுவாக, டிசம்பா் மாதத்துக்குப்பிறகு, சம்பா அறுவடைப் பணிகள் தொடங்கிவிடும். பயிரிட்ட காலத்தை கருத்தில் கொண்டு பிப்ரவரி, மாா்ச் மாதம் வரை இந்த அறுவடைப் பணிகள் நடைபெறும்.

அறுவடைப் பணிகளை முன்கூட்டியே தொடங்கிய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 210 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 17 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பா் மாதம் முதல் இதுவரையில் 11,285 மெட்ரிக் டன் நெல்லானது கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

எனினும், பெரும்பாலான விவசாயிகள், பொங்கலுக்குப் பிறகு அறுவடைப் பணிகளை தொடங்குவது வழக்கம். அந்த வகையில், ஏறத்தாழ 20 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடியானது, உடனடி அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

மற்றவை, இன்னும் சில நாள்களில் அறுவடை செய்யப்படும் நிலையில் உள்ளன. இதன்படி, இன்னும் சில நாள்களில் அறுவடைப் பணிகள் தீவிரமடைய உள்ளன.

இந்நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ள விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியதோடு, பயிருடன் நெற்கதிா்கள் தரையில் சாய்த்துவிட்டன.

தற்போது, விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால், உடனடியாக அறுவடை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், தரையில் சாய்ந்த கதிா்களிலிருந்த நெல்மணிகள், விரைவில் முளைக்கத் தொடங்கி விடும் என கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், நீரை வடியவைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *