2032 ஒலிம்பிக்ஸ் நடத்த இந்தியாவை அடுத்து இந்தோனீஷியாவும் போட்டி

Share on

2032 ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த போட்டி போடுவதற்கு இந்தோனீஷியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பச் உடன் கடந்த சனிக்கிழமை நடந்த சந்திப்புக்கு பிறகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பலதர விளையாட்டு போட்டியான ஆசிய விளையாட்டை தற்போது அந்நாடு நடத்தி வருகிறது.

2032 ஒலிம்பிக்கை நடத்த போட்டி போட இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

”ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திய அட்டகாசமான அனுபவத்தையடுத்து எங்களால் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சியான ஒலிம்பிக்கையும் நடத்தமுடியும் என நாங்கள் நம்புகிறோம்” என விடோடோ தெரிவித்துள்ளார்.

60 வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக 45 நாடுகளில் இருந்து 12 ஆயிரம் விளையாட்டு மற்றும் தடகள வீரர்கள் இந்தோனீஷியாவில் போட்டியிட்டு வந்தனர்.

வியட்நாம் நிதி பிரச்னை காரணமாக விலகியதையடுத்து நான்கு வருடங்களுக்கு முன்னதாகதான் இந்தோனீசியாவுக்கு ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் இந்தோனீசியாவின் கருத்தை வரவேற்றுள்ளார். 2032 ஒலிம்பிக் நடத்துவதற்கான போட்டியில் பங்கேற்க ஆசிய விளையாட்டை நடத்தியது வலுவான அடித்தளமாக இந்தோனீசியாவிற்கு அமைந்துள்ளது என்றார்.

”வெற்றிகரமாக ஆசிய விளையாட்டை நடத்தியதையடுத்து, ஒலிம்பிக்கை நடத்துவதற்கு தேவையான அனைத்து விஷயங்களும் தன்னிடம் இருப்பதை இந்தோனீஷியா காட்டியுள்ளது” என பச் கூறியுள்ளார்.

2020 ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் தனது தலைநகரான டோக்கியோவில் நடத்துகிறது. 2024-ல் பிரான்ஸ் தனது தலைநகர் பாரிஸிலும், 2028 ஒலிம்பிக்கை அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடத்தவுள்ளது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *