சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைப்பு நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்; ஒப்பந்தம் ரத்து

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தின் சாலைகள், பாலங்கள் உள்பட உள்கட்டமைப்பு வசதிகள் தரமாகவும், சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் அவரது உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒப்பந்ததாரர்களுடன் சென்னையில் கடந்த 30-ந் தேதி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘தமிழ்நாட்டில் அமைக்கப்படும் சாலைகள் தரமாக இருக்க வேண்டும். எனவே ஒப்பந்ததாரர்கள் ‘தரமே நிரந்தரம்-இதுவே தாரக மந்திரம்’ என்பதை நினைவில் வைத்து பணியாற்றிட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பணியிடை நீக்கம்;

தனது வேண்டுகோளை பொருட்படுத்தாமல், சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் குறிப்பிட்ட சாலையை ஆய்வு நடத்தினர். இதில் தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் 3 பேர் மீது ‘சஸ்பெண்டு’ (பணியிடை நீக்கம்) நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒப்பந்தம் ரத்து;

இதுகுறித்து தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி – ஒட்டாணம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அமைச்சரின் உத்தரவின்படி, சாலை பணிகளை ஆய்வு செய்ய தரக்கட்டுப்பாடு குழுவினருடன் நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநர் கீதா, அந்த சாலைப் பணிகளை நேரில் ஆய்வும், முறையான விசாரணையும் மேற்கொண்டார்.

அந்த ஆய்வில் சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு உள்ளது உறுதி செய்யப்பட்டது. தரமற்ற சாலைகள் அமைத்த அலுவலர்களான உதவி கோட்டப்பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் மருதுபாண்டி மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் நவநீதி ஆகிய 3 பேரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செந்தில் உத்திரவிட்டுள்ளார். மேலும், சாலை பணி ஒப்பந்ததாரர் ‘தர்ஷன் அன்ட் கோ’வின் ஒப்பந்தத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

சிவகங்கை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *