பாலிவுட்டின் முதல் கான் நடிகர்.. முகமது யூசுப் கான் திலீப் குமாராக எப்படி மாறினார் தெரியுமா?

மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 98.

கடந்த சில மாதங்களாகவே மூச்சுத் திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல் நலன் தேறிய பின்னர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்து விட்டது. பாலிவுட் சினிமா உலகில் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் என மூன்று கான்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னமே முதல் கான் நடிகராக கலக்கிய திலீப்குமாரின் கதை குறித்து பார்ப்போம்.

1944ம் ஆண்டு வெளியான Jwar Bhata திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் திலீப் குமார். சுமார் 60 ஆண்டுகள் இந்தி சினிமாவில் 65 படங்களில் நடித்து கலக்கியவர் திலீப் குமார். ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வந்த திலீப் குமாரின் சினிமா காலம் இந்தி சினிமாவின் பொற்காலமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாகிஸ்தான் அரசின் உயரிய விருதான நிஷான் -இ- இமிதியாஸ் உள்ளிட்ட விருதுகளும் ஏகப்பட்ட பிலிம்ஃபேர் விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளார் திலீப் குமார். டிராஜடி கிங் ஆஃப் இந்தியன் சினிமா என்ற பட்டமும் இவருக்கு உண்டு.

பழக்கடை வியாபாரி முகமது சர்வார் கான் மற்றும் அவரது மனைவி ஆயிஷா பேகமுக்கு மொத்தம் 12 குழந்தைகள் பிறந்தது. அதில், 5வது குழந்தையாக 1922ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பிறந்த குழந்தைக்கு முகமது யூசுப் கான் என பெற்றோர் பெயர் வைத்தனர். அந்த குழந்தை தான் பாலிவுட் சினிமா உலகை ஆளப் போகிறது என அப்போது அவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

முகமது யூசுப் கானின் குடும்பம் பெஷாவரில் இருந்து கொல்கத்தாவுக்கும் பின்னர் அங்கிருந்து மும்பைக்கும் நகர்ந்து சென்றது. மும்பையில் உள்ள அஞ்சுமான் -இ-இஸ்லாம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர், வில்சன் கல்லூரி மற்றும் கால்சா கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றார். கால்சா கல்லூரி தான் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் கபூர் உடன் நட்பு பாராட்டினார். இருவரும் பெஷாவரில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1951ம் ஆண்டு வெளியான தரானா படத்தில் நடிகை மதுபாலாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் திலீப் குமார். பின்னர் 1952ம் ஆண்டு சங்தில் படத்திலும் இருவரும் ஜோடி சேர்ந்தனர். 1954ம் ஆண்டு வெளியான அமர் திரைப்படம் இருவரது நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 1960ம் ஆண்டு முகல் இ ஆசாம் படத்திலும் இருவரும் நடித்திருந்தனர். இந்த காலக் கட்டத்தில் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், 1966ம் ஆண்டு மதுபாலாவை திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார்.

அப்பாவின் பிசினஸை எடுத்து நடத்த வேண்டும் என்கிற முனைப்புடன் இருந்த முகமது யூசுப் கானுக்கு ராஜ் கபூர் உடனான பழக்கம் சினிமா பக்கம் அவரை கொண்டு வந்து சேர்த்தது. 1942ம் ஆண்டு பாம்பே டாக்கிஸ் ஸ்டூடியோ ஓனர் தேவிகா ராணி தான் முகமது யூசுப் கான் பெயரை திலீப் குமார் என மாற்றி அவரை ஹீரோவாக ஆக்கினார்.

திலீப் குமாராக மாறிய முகமது யூசுப் கானுக்கு மாத சம்பளமாக 1,250 ரூபாய் சம்பளத்தை தேவிகா ராணி வழங்கி வந்தார். 1944ம் ஆண்டு ஜவார் பட்டா எனும் முதல் படம் திலீப் குமார் நடிப்பில் வெளியானது. இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய நடிகராக திலீப் குமார் மாற தேவிகா ராணி செய்த பெயர் மாற்றமும் ஒரு காரணமாக மாறியது. பாலிவுட்டின் முதல் கான் நடிகர் என பின்பு அவர் குறிப்பிடப்பட்டாலும், இன்றளவும் திலீப் குமாராகவே அறியப்படுகிறார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *