மணல் திருட்டை காட்டிக்கொடுத்த நபர் மீது தாக்குதல்!!

புதுக்கோட்டை அடுத்த பெருமாநாடு அருகே உள்ள கோதண்டராமபுரம் முருகராஜ்‌ நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒரு சோப்பு நிறுவனத்தில் ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான செல்வராஜ் மற்றும் அவரது சகோதரர் பெருமாள் உள்ளிட்டோர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக கீழப்பளுவஞ்சி, சேந்தமங்கலம், பேரையூர், கும்மங்குடி, குருக்கப்பட்டி, சுந்தரபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள வெள்ளாற்றுப்படுகையில் அவர்களுக்கு சொந்தமான லாரி ஜேசிபி இயந்திரம் ஹிட்டாச்சி உள்ளிட்டவற்றைக் கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த பகுதியில் அள்ளப்படும் மணல்களை ஓரிடத்தில் சேமித்து வைத்து பின்னர் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் நாளொன்றுக்கு பல லட்சம் மதிப்பிலான மணல்களை கொள்ளை அடிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இது குறித்து ஆதாரத்துடன் பழனிச்சாமி காவல் நிலையம் வருவாய்த் துறையினர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார்மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது, இதனையடுத்து பழனிச்சாமி நீதிமன்றத்திற்கு சென்று உள்ளார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பையும் அழைத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் தரப்பினர் பழனிச்சாமியை ஊருக்குள் வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பழனிச்சாமி தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் காவல் துறையினர் செல்வராஜ் தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பலமுறை சட்டவிரோத மணல் அள்ளுவது குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால் தங்கள் பகுதியில் கனிம வளம் சுரண்டப் படுவதாகவும் அரசின் அனுமதி பெறாமல் நடக்கும் சட்ட விரோத மணல் கொள்ளையை தட்டிக் கேட்டால் தன்னை மிரட்டி தன்மீது தாக்குதல் நடத்துவதாகவும் இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்

MrChe #மிஸ்டர்சே

                                                                                                              புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp link-https://chat.whatsapp.com/K7aHtwkOFkG9UX0FLqqVHR

Facebook Link- https://www.facebook.com/groups/PudukaiNews/

Twitter Link- https://twitter.com/PudukaiNews?s=08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *