வானிலை மையம் தகவல் ; தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்… மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு !!

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடைக் காலம் தொடங்கும் முன்னரே, இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையமும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் கோடைக் காலத்திற்கு முன்னரே அதிகரித்தது. தினசரி அதிகபட்ச வெப்பநிலை பல மாவட்டங்களில் சதமடித்து வருகிறது.

ஈரோட்டில் அதிகம் இன்று அதிகபட்சமாக ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாக உள்ளது. அதைத்தொடர்ந்து திருப்பூர் மற்றும் அரக்கோணத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோவை மற்றும் மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் திருச்சியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வறண்ட வானிலை மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலையே தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கடந்த சில நாட்களைவிட ஒப்பீட்டளவில் இன்று மாநிலத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

தென் தமிழகத்தில் மழை இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் வரும் 12ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தென் தமிழகத்திலுள்ள ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *