சேலம் மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு !!

சேலம்:

சேலம் மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் 4 வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு:

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து வாக்குப்பதிவு முடிந்தவுடன், தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் 4 இடங்களில் வைத்து எண்ணப்படுகின்றன. சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மையத்திலும், சேலம் தெற்கு, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அம்மாபேட்டை கணேஷ் கலை அறிவியல் கல்லூரி மையத்திலும் எண்ணப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் மையங்கள்:

இதேபோல், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள், சங்ககிரி விவேகானந்தா கல்லூரி மையத்திலும், ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும் எண்ணப்படுகிறது.இந்த 4 மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், பதிவாகும் காட்சிகளை நேரடியாக கண்காணிக்க எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, அந்தந்த தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் வைத்து பூட்டுபோட்டு சீல் வைக்கப்படும்.

3 அடுக்கு பாதுகாப்பு:

அந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், ஆயுதப்படை போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயிலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் 24 மணி நேரமும் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி நடைபெற உள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

சேலம் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/C7LsoZBUWm7C1Ttxtw1m4D

Facebook Link https://www.facebook.com/groups/SalemDistrictNews/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *