காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்!!

காஞ்சீபுரம்,


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதசாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா இந்த மாதம் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் 63 நாயன்மார்கள் ஊர்வலமும், இரவு வெள்ளித்தேர் வீதியுலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி தேரின் உள்பகுதி முழுவதும் வண்ண மலர்களாலும், காய்கறிகளாலும், பழங்களாலும், வண்ண பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் உற்சவர் ஏகாம்பரநாதரும், ஏலவார் குழலி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். பின்னர் தேரோட்டம் தொடங்கியது. காஞ்சீபுரம் நகரின் ராஜவீதிகளில் வீதிஉலா வந்த தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.


முன்னதாக தேரோட்டத்தை ஐகோர்ட்டு நீதிபதி எம்.கிருபாகரன் தொடங்கி வைத்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பொன்.ஜெயராமன், உதவி ஆணையர் ஜெயா, ஆய்வாளர் பிரித்திகா, செயல் அலுவலர்கள் வெள்ளைச்சாமி, குமரன், செந்தில்குமார், காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் மடாதிபதி சிவப்பிரகாச தேசிக ஞானப்பிரகாச தர்மாச்சாரிய சுவாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தேரோட்டத்தின் போது சென்னை, குற்றாலம், தூத்துக்குடி, காஞ்சீபுரம் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான சிவனடியார்கள், தேரின் முன்பு சிவவாத்தியங்களை இசைத்தபடியும், வேத விற்பனர்கள் வேதபாராயணம் பாடியபடியும் தேரின் முன்பாக சென்றனர். விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) கோவிலின் வரலாற்றை விளக்கும் வெள்ளி மாவடி சேவை காட்சியும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

வருகிற 30-ந்தேதி கொடி இறக்கமும், 31-ந்தேதி 108 கலச அபிஷேகத்துடனும் விழா நிறைவு பெறுகிறது.
வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூர் ஸ்ரீகாமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மூஷிக வாகனம், சிம்ம வாகனம், சந்திரபிரபை, பஞ்சமூர்த்தி புறப்பாடு, ரிஷப வாகனம், சூரியபிரபை உள்ளிட்ட வாகனங்களில் ஏகாம்பரநாதர் வீதி உலா வந்தார்.

இந்தநிலையில், நேற்று தேர்த்திருவிழாவையொட்டி, திருத்தேரில் சாமி எழுந்தருளி 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து தேரானது நிலையம் வந்தடைந்த நிலையில், காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.


திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த காமாட்சியம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாளான நேற்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காமாட்சி அம்மன் உடனுறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

#MrChe #மிஸ்டர்சே

காஞ்சிபுரம் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp link –https://chat.whatsapp.com/I8eLeoGiNPt4hXokna9k69

Facebook link – https://www.facebook.com/groups/KanchipuramDistrictNews/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *